×

மானாமதுரை - மதுரை, மானாமதுரை - விருதுநகர் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்குவது எப்போது?

* எரிபொருள் செலவு மிச்சம், பயண நேரம் குறையும்
* மின்மயமாக்கும் பணிகள் முடிந்து பல மாதம் ஆச்சு
* பல்லவன் தவிர மற்றவை இன்னும் டீசலில் தான் ஓடுது


மானாமதுரை : தென் மாவட்டங்களில் ரயில்பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், மின்சார ரயில்களை இயக்கவில்லை. இதனால் பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். நாடு முழுவதும் டீசல் ரயில் இன்ஜின்களை நிறுத்திவிட்டு மின்சார ரயில்களை இயக்க அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இவற்றில் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின்பாதை அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு தனியார் பங்களிப்புடன் துவக்கப்பட்டது. அதன்பின் கொரோனா காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. இப்பணிகள் கடந்த 2021 அக்டோபரில் மீண்டும் துவங்கின.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தளவில், மானாமதுரை - மதுரை, மானாமதுரை - விருதுநகர், காரைக்குடி - திருச்சி உள்ளிட்ட முக்கிய பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் முடிந்துவிட்டன. காரைக்குடி - திருச்சி பாதையில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மானாமதுரை - மதுரை, மானாமதுரை - விருதுநகர் வழித்தடங்களில் இன்னும் டீசல் இன்ஜின் ரயில்களே இயக்கப்படுகின்றன. இதில் மதுரை - மானாமதுரை மின்பாதை பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது.

ராமேஸ்வரம் ஓகா வாராந்திர ரயில் மின்சார ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இயக்கப்படவில்லை. தினசரி மானாமதுரை வழியாக செல்லும் ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில்கள், ராமேஸ்வரத்தில் இருந்து வாராந்திர ரயிலாக மதுரை வழியாக இயக்கப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மண்டுவாடி எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டீசல் இன்ஜின்களுடனே இயக்கப்படுகின்றன.

 மேலும் மானாமதுரை - ராமநாதபுரம் மின்பாதை பணிகள் முடிந்து பல மாதங்களாக ஆய்வுக்காக காத்திருக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் இடையே மின்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் மானாமதுரை - விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகியவையும் டீசல் இன்ஜின் மூலமாகவே இயக்கப்படுகிறது. இவ்வாறு மானாமதுரை வழியாக விருதுநகர், காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட நான்கு மார்க்கங்களிலும் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் டீசலில் இயங்குவதால் அதிக எரிபொருள் செலவு ஏற்படுகிறது.

 மேலும் முக்கிய சந்திப்புகளில் இன்ஜின் மாற்றுவதால் நேர விரயமாகிறது. எனவே எரிபொருள் செலவு, நேரத்தை குறைக்கும் வகையில் மின்மயமாக்கப்பட்ட பாதைகளில் விரைவில் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் நாகராஜன் கூறுகையில், ‘‘திருச்சி - காரைக்குடி பாதை மின்மயமாக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிறது. தற்போது பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து காரைக்குடி வரை ஒரே இன்ஜின் மூலம் வந்து சேருவதால் பயண நேரம் குறைகிறது. அதேபோல வடமாநிலங்களில் இருந்து காரைக்குடி வழியாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி செல்லும் ரயில்களை நீட்டிக்க காரைக்குடி - மானாமதுரை பாதையை மின்மயமாக்கும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகிறது. மதுரை - மானாமதுரை மின்மயமாக்கும் பணிகள் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது. இந்த மார்க்கத்தில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்குவது, காரைக்குடி வரை உள்ள பல்லவன் ரயில், காரைக்குடி திருத்துறைப்பூண்டி பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க முடியும். மேலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில்பாதையையும் மின்மயமாக்கினால் ரயில்களின் பயணநேரம் குறையும். எனவே விரைவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் மின்சார ரயில்களை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Manamadurai ,Madurai , Madurai, Virshunagar, Electric train, Electric Engine, Karaikudi
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...