×

சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி பேரின் டிவிட்டர் தகவல்கள் திருடப்பட்டதா?.. ஹேக்கரின் எச்சரிக்கையால் பரபரப்பு

புதுடெல்லி: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பிரபல நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 40 கோடி பேரின் டிவிட்டர் தகவல்களை திருடி விற்பனைக்கு வைத்துள்ளதாக ஹேக்கர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல சமூக ஊடகமான டிவிட்டரை, உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அவரது பல முடிவுகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டிவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், டிவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது மஸ்க்குக்கு பேரியடியாக அமைந்துள்ளது.

அந்த ஹேக்கர், 40 கோடி பேரின் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு இருப்பதாகவும், அதில் சில மாதிரி தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதில், திருடப்பட்ட டிவிட்டர் கணக்கு வைப்போரின் இமெயில், பெயர், பயனர் பெயர், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, கணக்கு உருவாக்கிய தேதி, பயனர்களின் செல்போன் எண் ஆகியவை அடங்கி உள்ளன. இதில் முக்கியமான விஷயம், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான்கான், நாசா, இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்,உலக சுகாதார நிறுவனம் போன்ற பல பிரபலங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் தலைவர்களின் டிவிட்டர் தகவல்களும் திருடப்பட்டிருப்பதாக ஹேக்கர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2021ல் டிவிட்டரில் 54 லட்சம் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு அமைப்பு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், 40 கோடி தகவலை திருடிய ஹேக்கர் தனது செய்தியில், ‘54 லட்சம் தகவல் திருட்டில் ஏற்கனவே உங்களுக்கு (எலான் மஸ்க்) அபராதம் விதிக்கும் அபாயம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், 40 கோடி பேரின் தகவல் திருட்டை எண்ணிப் பாருங்கள். பேஸ்புக்கில் 53 கோடி பேரின் தகவல் திருடு போனதற்காக மெட்டா நிறுவனம் ரூ.2,200 கோடி அபராதம் செலுத்தி இருக்கிறது. அதையும் எண்ணிப்பாருங்கள். அதோடு இந்த விவகாரம் உங்கள் நிறுவனம் மீதான நம்பகத்தன்மையை அடியோடு அழித்து விடும். எனவே இடைத்தரகர் மூலம் ஒப்பந்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ என பேரம் பேச அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தகவல் திருட்டு உண்மையானதாக இருந்தால், டிவிட்டர் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கேலினும் கூறி உள்ளார்.

Tags : Twitter ,Sundar Pichai ,Salman Khan , Sundar Pichai, Salman Khan, Hacker's Alert, Sensation
× RELATED சமந்தா வாய்ப்பை பறித்தார் பூஜா ஹெக்டே