×

சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு 100 சதவீத ஆர்டிபிசிஆர் சோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி

சென்னை: கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமானநிலையங்களில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ராஜாஜியின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை,  கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு செய்தி  மக்கள் தொடர்பு துறை சார்பில் ராஜாஜியின் வாழ்க்கை வரலாறை  சித்தரிக்கும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த  நிகழ்ச்சியில் மேயர் பிரியா, எம்எல்ஏ பிரபாகரராஜா,  செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்துகொண்டனர். இதுகுறித்து நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24ம் தேதி முதல் 2% ரேண்டமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒன்றிய அமைச்சரின் டிவிட்டர் பதிவில் சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமானநிலையங்களில் ஒன்றிய அமைச்சர் குறிப்பிட்டுள்ள ஐந்து நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 92% சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 90 சதவீதம் பெருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது.

முகக்கவசம் அவசியம் இருப்பினும் பொதுமக்கள் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகள் எதுவும் தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்படவில்லை. எனவே மக்கள் தங்களின் நலன் கருதி முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,M. Subramaniam , 100 percent RTPCR test for passengers arriving on international flights: Minister M. Subramaniam interview
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...