திருவொற்றியூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 4 வாலிபர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

சென்னை: திருவொற்றியூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 4 வட மாநில வாலிபர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மணலி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இங்கு, கட்டிட தொழிலாளர்கள் தங்குவதற்கான கூடாரம் அமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் ஒருவர் செய்து வருகிறார். இதற்காக, வடமாநில தொழிலாளர்கள் பலர், ஆண்டார்குப்பம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால், ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் அருகே, கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தனர். அங்கு, 8 தொழிலாளர்கள் மட்டும் கடலில் குளித்துக்கொண்டு இருந்தனர். மற்றவர்கள் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி, 8 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேர்  சாதுர்யமாக தப்பித்து கரைக்கு வந்தனர். மற்ற 4 பேர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதை பார்த்து கரையில் இருந்த தொழிலாளர்கள் உதவி கேட்டு அலறி கூச்சலிட்டனர்.

அதன்பேரில், அருகில் வலையை உலர்த்திக்கொண்டு இருந்த மீனவர்கள் விரைந்து வந்து, கடலில் குதித்து மூழ்கிய 4 பேரை தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருவொற்றியூர் மற்றும் எண்ணூரில் இருந்து 20 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாயமானவர்களை, படகுகளில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், வடமாநிலத்தை சேர்ந்த முஸ்தகீன் (22), இவரது தம்பி இப்ராஹிம் (20), வஷீம் (26), புர்கான் (28) ஆகிய 4 பேர் கடலில் மூழ்கி மாயமானது தெரியவந்தது. திருவொற்றியூர் பகுதியில் கடலில் குளிக்கும் பலர் அடிக்கடி அலையில் சிக்கி உயிரிழப்பதால் இந்த பகுதியில் குளிக்க கூடாது என்று போலீசார் தடை விதித்து, அதற்கான அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். ஆனாலும் அதையும் மீறி இது போல் விடுமுறை நாட்களில் கடலில் குளிப்பதால் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

Related Stories: