×

லடாக், தவாங் செக்டார் மோதலுக்கு இடையே இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்! சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு

பீஜிங்: லடாக், தவாங் செக்டார் பகுதியில் மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்தார். அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் கடந்த 9ம் தேதி இந்திய - சீன வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் சிலரும், இந்திய வீரர்கள் 4 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக இருதரப்பும் கூறப்பட்டது.

ஏற்கனவே லடாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், தற்போது தவாங் செக்டார் விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கடந்த 20ம் தேதி, இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகளுக்குக இடையே 17வது சுற்று ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சுஜுல்-மோல்டோ எல்லையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சூழ்நிலை மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள் பற்றிய வருடாந்திர கருத்தரங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசுகையில், ‘இந்தியா - சீனா இடையே தூதரக மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எல்லையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். இரு  நாட்டு ராணுவங்களுக்கிடையில் சுமூகமான உறவுகள் உள்ளது. நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்’ என்றார்.

Tags : India ,Ladakh ,Tawang ,Chinese Foreign Minister , Ready to work with India amid Ladakh, Tawang sector conflict! Chinese Foreign Minister Speech
× RELATED லடாக் எல்லையில் ராணுவ...