கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து வீடுகளில் சோதனை.! என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 5 பேரை 9 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது வீடுகளுக்கு நேரில் அழைத்து சென்று சோதனை செய்து வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின்(29) பலியானார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 75 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் சதித்திட்டம் தீட்டியதாக அவரது கூட்டாளிகள் முகமது அசாருதீன்(25), முகமது தல்கா (25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான்(24) ஆகிய 6 பேரை உபா பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் 2 அறைகள் ஒதுக்கப்பட்டு என்.ஐ.ஏ அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. என்ஐஏ டிஐஜி வந்தனா தலைமையில் எஸ்பி ஸ்ரீஜித் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரியாக என்ஐஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே வழக்கு விசாரணைக்கு ஏதுவாக கைதானவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

 இதற்கிடையே கைதானவர்களில் பெரோஷ்கான், உமர் பாரூக், முகம்மது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 21ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேரையும் 9 நாட்கள் காவலில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து 21ம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேரும் நேற்று இரவு கோவை அழைத்து வரப்பட்டனர். பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை கோவை உக்கடம் ஜி.எம்.நகர், கரும்புக்கடை, கோட்டைமேடு, அல் அமீன் காலனி போன்ற பகுதிகளில் உள்ள 5 பேரின் வீடுகளுக்கு அவர்களை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தி சோதனை செய்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

Related Stories: