×

காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்க பெருமாள் கோயில் குளம் சீரமைக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு பகுதியையொட்டி அமைந்துள்ள அழகிய சிங்க பெருமாள் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு அருகில் பக்தர்களின் வசதிக்காகவும், கோவில் அபிஷேக பயன்பாட்டிற்காகவும் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழாக் காலங்களில் இந்தக் கோயில் குளங்களில் தெப்ப உற்சவமும் நடைபெறும். ஆனால் தற்போது இந்தக் கோயில் குளங்கள் பெரும்பாலானவை தூர்வாரப்படாமலும் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பாலும் பாழடைந்து உள்ளன.

இதேபோன்று, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அழகிய சிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள திருக்குளம் பராமரிப்பில்லாமல் பாழடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில்கள் 108ல் காஞ்சிபுரத்தில் மட்டும் 14 கோயில்கள் உள்ளது. அதில், பேயாழ்வாரால் பாடல் பெற்ற அழகிய சிங்க பெருமாள் கோயிலும் ஒன்று. இத்தலம் காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த, கோயிலுக்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்து அழகியசிங்க பெருமாளை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள அனுமன் கோயில் அருகில் உள்ள அழகிய சிங்க பெருமாள் கோயில் குளம் பாழடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. குளம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் சுற்றுச்சுவர் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு குளத்தின் பக்கவாட்டில் ஷீட் அடித்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது: கோயில் குளத்தை சீரமைக்க கோரி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

எனவே, இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பூவழகியிடம் கேட்டபோது, அழகிய சிங்க பெருமாள் கோயில் குளம் கோயில் படிக்கட்டுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. எனவே, முழுமையாக சீரமைக்க ₹60.50 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் வரும் ஜனவரி மாதத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

Tags : Singha Perumal ,Kancheepuram , Will the beautiful Singha Perumal temple pond in Kancheepuram be repaired?.. Devotees expect
× RELATED தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு...