டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 108-வது நாளாக தலைநகர் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லியில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் மேசிய ராகுல்காந்தி, “எல்லா இடங்களிலும் மத வெறுப்புணர்ச்சி. யாத்திரையை தொடங்கியபோது நாட்டில் நிலவும் வெறுப்புணர்ச்சியை நீக்க நினைத்தேன். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்ததுதான் இந்தியா. அவர்கள் வெறுப்பை பரப்புகிறார்கள். நாங்கள் அன்பை விதைக்கிறோம். அவர்கள் வன்முறையை பரவ செய்கிறார்கள்.
நாங்கள் அகிம்சையை பரவச் செய்கிறோம். அவர்கள் அஞ்சுகிறார்கள். நாங்கள் எதற்கும் அஞ்சுவது இல்லை. எனது இமேஜை அழிக்க, பிரதமரும், பா.ஜ.,வும், பல ஆயிரம் கோடி செலவு செய்துள்ளன. ஆனால் நான் ஒரு மாதத்தில் எனது உண்மை முகத்தை நாட்டுக்கு காட்டினேன். உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாஜக அரசு இந்து-முஸ்லீம் வெறுப்பைப் பரப்புகிறது. இது பிரதமர் மோடியுடைய அரசாங்கம் அல்ல, அம்பானி மற்றும் அதானியின் அரசாங்கம். பேரணிக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கிய லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.