ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு அமைச்சர் சேகர்பாபு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் எளிமையாக தரிசனம்  மேற்கொள்ளும் வகையில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டிலுள்ள வைணவத் திருக்கோயில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிகளவில் பங்கேற்கும் இதுபோன்ற விழாக்களில் அவர்கள் எளிய முறையில் தரிசனம் செய்திட ஏதுவாக அந்தந்த திருக்கோயில்களின் மூலம் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த வாரம் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் ஆய்வு செய்த மாண்புமிகு அமைச்சர், இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டிலுள்ள, பக்தர்கள் அதிகமாக வருகின்ற  திருக்கோயில்களில் அவர்களுக்கு தேவையான  அடிப்படை வசதிகளையும், எளிய முறையில் தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி.  

இன்றைக்கு 108 திவ்ய தேசங்களில் முதன்மையாக திகழும்  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து  துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தோம். குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி நாளன்று சொர்க்கவாசல் வழியாக சுவாமி வலம் வருகின்றபோதும்,  பகல் பத்து, இராப்பத்து நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, இந்த பெருவிழாவின்  20 நாட்களில் சுமார் 17 லட்சம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி நாளன்று சுமார் 2 லட்சம் பக்தர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெருவிழாவிற்கு  3000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  

மருத்துவ உதவிகளுக்காக 10 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் மற்றும் 10 உதவியாளர்களை கொண்ட சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அதோடு திருக்கோயிலின் மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் 2 செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிவதற்கும், நான்கு கோபுர வாசல்களிலும்  நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கவும், அவசர உதவிக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்திடும் வகையில் 60 தீயணைப்பு வீரர்களுடன் 4 தீயணைப்பு வாகனங்களும், தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் வகையில் இத்திருக்கோயிலில் ஒரு மணி நேரத்திற்கு 5200 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும்  12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடவும், திருக்கோயிலின் சுற்றுப்புறத்தில் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை வசதிகளோடு, 40 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைத்திடவும், குப்பைகள் உடனுக்குடன் அகற்றி, சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் பாதுகாத்திட 200 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கோயிலில் அதிகமான பக்தர்கள் கூடுகின்றபோது அதனை கண்காணித்து, ஒழுங்குபடுத்தி விரைவான தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கின்ற வகையில் இந்து சமய அறநிலையத்துறையின்  இணை ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் கந்த சஷ்டிவிழா, திருவண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழா போன்றவற்றில் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும், எவ்வித அசம்பாவிதத்திற்கும் இடமின்றி, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதோ, அதேபோன்ற அனைத்து வசதிகளையும் செய்து வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்திட தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்டு இருக்கின்றோம்.

பொது வரிசையில் வருகின்ற பக்தர்களுக்கும் இடையூறு இல்லாமல்,  மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர், பாலூட்டும் தாய்மார்கள், உடல் நலிவுற்றோர் சிறப்பு தரிசனம் செய்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதனை செயல்படுத்திட  இந்து சமய அறநிலையத்துறை முயற்சி எடுக்கும். முதலமைச்சர், இதுபோன்ற நிகழ்வுகளில் அதிக பக்தர்கள் கூடுகின்ற போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது, அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவிட்டுள்ளதால் இது போன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்ற திருக்கோவிலுக்கு நேரடியாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகம், காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து இது போன்ற முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த முறை வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் 4,000 ரூபாய் சந்தனு மண்டப அனுமதிச் சீட்டு 300 நபர்களுக்கும், கிளி மண்டப அனுமதிச் சீட்டு 1000 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. அந்த கட்டணத்தில் கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்காமலும், வெளிப்படை தன்மையோடு எந்தவித தவறுக்கும் இடம் தராமல் நடந்து கொள்ள வேண்டுமென்றும்,  வெளிமாநிலத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் இப்பெருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றை பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் சம்மந்தப்பட் துறை உயர் அலுவலர்களோடு ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.  வருமுன் காக்கும் அரசாக இந்த அரசு நிச்சயம் கொரோனா வைரஸ் பரவலை குறித்த தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கின்றார் ஆகவே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவெடுத்து மக்கள் எந்த வகையிலும பாதிக்காத வண்ணம் இந்த அரசு செயல்படும்.  

இந்த ஆய்வின்போது  ஸ்ரீரங்கம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  திரு. எம். பழனியாண்டி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் திரு.வி.அன்பு, இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர்கள்  திரு.அர. சுதர்சன், திரு.செல்வராஜ்,  திரு. மாரிமுத்து,  மண்டலக் குழுத் தலைவர் திருமதி ஆண்டாள் ராம்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories: