×

கொரோனா பரவல் எதிரொலி!: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வையுங்கள்.. மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்..!!

டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கிருந்த ஜீரோ கோவிட் பாலிசி உடனடியாக முற்றிலும் நீக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. சீனாவில் இப்படி திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரிக்க அங்குப் பரவும் ஓமிக்ரான் வகை கொரோனாவே முக்கிய காரணம். பிரிட்டன், அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இந்தியாவிலும் கூட இதுவரை குஜராத், ஒடிசா மாநிலங்களில் சிலருக்கு இந்த வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சீனாவையும் ஸ்தமிக்க வைக்கும் இந்த கொரோனா மீண்டும் உலகெங்கும் ஒரு அலையை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் BF.7 வைரஸ் இந்தியாவுக்குள் பரவாமல் இருக்க ஒன்றிய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் சீரான விநியோகத்தை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பை மாநில அரசுகள் உறுதி செய்து கொள்ளுமாறும் ஒன்றிய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. புதிய வகை கொரோனா திரிபு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அருவுறுத்தியுள்ளது.


Tags : Corona ,Union Government , Corona Spread, Hospital, Oxygen Cylinder, United Govt
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...