×

சீரான மழை பொழிவால் 13 ஆண்டுகளுக்கு பின் வட்டமலை ஓடையில் நீர்வரத்து -விவசாயிகள் மகிழ்ச்சி

வெள்ளகோவில் : நடப்பாண்டில் சீரான மழை பொழிவு காரணமாக 13 ஆண்டுகளுக்கு பின் வட்டமலை ஓடையில் நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஆண்டு சராசரி மழை அளவு 607.4 மில்லி மீட்டராகும். மாவட்டத்தின் நில அமைப்பு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மழை மறைவு பகுதியாக அமைந்திருப்பதால் தென்மேற்கு பருவ மழையும் பொழிவும் போதிய அளவு கிடைக்காது. மேலும் வட கிழக்கு பருவ மழையின்போதும் சராசரி மழையே பதிவாகும். அதே நேரத்தில் புயல் உள்ளிட்ட காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும்போது சில ஆண்டுகள் மழை பொழிவு சராசரி மழை அளவை கடந்து பதிவாகும்.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சராசரியை விட 41 சதவீதமும், இந்த ஆண்டு சராசரி மழை அளவான 607.4 மிமீ விட 37 சதவீதம் அதிகரித்து 808.5 மிமீ மழை பொழிவை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. வடகிழக்கு பருவ மழை மூலமே திருப்பூர் மாவட்டம் அதிக மழைப்பொழிவை பெற்று வருகிறது. ஒராண்டில் பொழியும் மழையில் 57.1 சதவீதம் வடகிழக்கு பருவமழை மூலமும், 20.8 சதவீதம் தென்மேற்கு பருவ மழையின் மூலம் பெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 1.98 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் உள்ள நஞ்சை, புன்செய் நிலங்களில் தென்னை, நெல், மக்காச்சோளம், மரவள்ளி, பயறு வகை, கரும்பு, மஞ்சள், பீட்ரூட், தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளையும், ஆடு வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் செங்காந்தள் விதை உற்பத்தி என விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாகவே திருப்பூர் மாவட்டத்தில் சராசரிக்கும் அதிகமாகவே மழை பொழிவு இருந்து வருகிறது. மழை அளவானது 10 ஆண்டு சராசரி மழை அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதன்படி திருப்பூர் மாவட்ட சராசரி ஆண்டு மழை அளவு 607.4 மிமீட்டராகும். 2022ம் ஆண்டு இன்று வரை 808.5 மிமீ மழை மாவட்டத்தில் பெய்துள்ளது. இந்த ஆண்டு குளிர்காலத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 12.2 மிமீ பெய்யவேண்டிய மழை 25 சதவீதம் அதிகரித்து 15.7 மிமீ ஆகவும், கோடை காலத்தில் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை 125.5 மிமீ இயல்பான அளவை காட்டிலும் 27 சதவீதம் அதிகரித்து 159.2 மிமீ மழை பதிவானது.

இதேபோல் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை இயல்பு 155.9 மிமீ மழையை விட 70 சதவீதம் அதிகரித்து 264.5 மிமீட்டராகவும், இதுவே வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் 22 ம் தேதி வரை 318.4 மிமீ இயல்பு மழைப்பொழிவை காட்டிலும் 24 சதவீதம் அதிகரித்து 369.3 மிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. இயல்பைவிட இரு ஆண்டாக மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் இதுவரை நீர் வரத்து இல்லாத ஓடைகளிலும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் குளம் குட்டைகளிலும் நீர் ஓரளவு நிரம்பி உள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கரடிவாவி பகுதிகளில் பெய்யும் மழை நீர் அங்கு தொடங்கும் கம்பிலி ஆறு எனும் வட்டமலை ஓடை வழியாக கேத்தனூர், கள்ளிபாளையம், புத்தரச்சல், கொக்கம்பாளையம், என்.காஞ்சிபுரம், நிழலி, வளவாநல்லூர், வட்டமலை, கோட்டபாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து உத்தம பாளையத்தில் கட்டப்பட்டுள்ள வட்ட மலைக்கரை ஓடை தடுப்பணையை வந்தடைகிறது.

இந்த ஓடையின் நீர் பிடிப்பு பகுதியானது 357 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. மேலும் பிஏபி பாசனத்தில் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு, தாராபுரம் பகுதிகளில் கிடைக்கும் கசிவு நீரும் வட்டமலை ஓடை வழியாக அமராவதி ஆற்றுக்கு செல்லும். இந்நிலையில் வட்டமலை ஓடையை தடுத்து கடந்த 1980ம் ஆண்டு வெள்ளகோவில் அருகே சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் 24.75 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி 0.27 டிஎம்சி நீர் இருப்பு வைத்து பாசனத்துக்கு நீர் திறக்கும் வகையில் வட்டமலைக்கரை அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் வெள்ளக்கோவில், தாசனாயக்கன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6,043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் இடது மற்றும் வலது வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.

1994ம் ஆண்டு பிஏபி பாசனம் 4 மண்டலமாக அதிகரித்ததை தொடர்ந்து கசிவு நீரும் வரவில்லை. மேலும் அணைக்கு வரும் வட்டமலை ஓடையில் 50 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டதால் அணைக்கு தண்ணீர் வரத்தும் நின்று போனது‌. மேலும் இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையும் பொய்த்து போனதால் அணை வறண்டு போனது.
 திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி கால்வாயில் உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கால் நூற்றாண்டாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு பல்லடம் கள்ளிபாளையம் பிஏபி ஷட்டரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, 47 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 58 சிறிய தடுப்பணைகள் நிரம்பி வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் 25 ஆண்டுகள் கடந்து நிரம்பியது.

கடந்த ஆண்டு பல்லடம் கள்ளிபாளையம் முதல் அணை வரை தொடர்ந்து 4 நாட்கள் வட்டமலை ஓடையில் தண்ணீர் ஒடியதால் வழியோரம் உள்ள 40க்கும் மேற்பட்ட கிரமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த மழையும் இந்த ஓடையில் கலந்ததால், பல ஆண்டாக காய்ந்து கிடந்த ஓடை பரப்பு நீரை உறிஞ்சி தக்க வைத்துக்கொண்டது.

இந்நிலையில், இந்த ஆண்டும் சீரான இடைவெளியில் மழை பெய்தது மற்றும் பிஏபி பாசன கசிவு நீரால் வட்டமலை ஓடையில் நீர் வரத்து வரத்தொடங்கியது. இதன் காரணமாக காங்கயம் அருகே உள்ள வளவாநல்லூர் தடுப்பணை வரை சுமார் 40க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை நிறைத்து ஓடையில் நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நீர் விரைவில் வட்டமலை முத்துகுமாரசாமி கோவில் அருகே வந்துவிடும், கடந்த ஆண்டு பிஏபி நீரை வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நான்கு நாட்கள் திறந்து விட்டதன் விளைவாக வட்டமலை ஓடையை ஒட்டி அமைந்துள்ள நிழலி, கொடுவாய், குங்காருபாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதி விவசாய கிணறுகளில் 13 ஆண்டுகள் கடந்து நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

மேலும் இந்த ஓடையின் வழியில் உள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலிலும் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து பறவைகள், விலங்கினங்கள் பெருக்கமும் ஏற்பட்டுள்ளது. தற்போது குங்காருபாளையம் அருகே வரை வட்டமலை ஓடையில் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த நீரை பயன்படுத்தி விவசாயிகள் மாட்டுத்தீவனமான சோளம் விதைப்பு செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டும் பிஏபி ஷட்டரில் இருந்து வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிட்டால் இன்னும் இரு ஆண்டுகளுக்கு குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கும், தென்னை மரங்களுக்கும் தண்ணீர் பிரச்னை ஏற்படாது என தெரிவித்தனர்.

Tags : Vattamalai , Vellakovil: Due to regular rainfall this year, farmers are getting water in Vattamalai stream after 13 years
× RELATED நிரந்தரமாக தண்ணீர் திறக்க வேண்டி...