சீனா, ஜப்பான், தென்கொரியா உள்பட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு..!!

டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியாவில் இருந்து வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து வரும் பயணிகளும் பரிசோதைக்கு உள்ளாவர் என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் BF.7 கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒன்றிய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்துவிட்டது என உலக நாடுகள் அனைத்தும் நிம்மதி பெருமூச்சு விட்ட சூழலில், சீனாவில் மீண்டும் அதிவேகம் எடுத்திருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் சீனாவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். சீனா மட்டுமல்லாமல் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் முந்தைய காலங்களை போல அதிகரித்துள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுவதால் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் சீனாவில் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் BF.7 மற்றும் BF.12 வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ்கள் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரை தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக டெஸ்ட் எடுக்கப்படும் என கூறிய நிலையில் ஒன்றிய அரசு இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா அறிகுறி, கொரோனா தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Related Stories: