×

மார்த்தாண்டம் பட்டறையில் 37 பவுன் கைவரிசை திருட்டு நகையை விற்று கொள்ளையன் உல்லாசம்-ஒரு வருடம் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் நகை பட்டறையில் இருந்து 37 பவுன் நகைகளை திருடி மேற்குவங்கத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் ஒரு ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளா  மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ் (43). மார்த்தாண்டம் ஆர்சி தெருவில்  நகை பட்டறை வைத்துள்ளார். அவரது நகை பட்டறையில் கடந்த ஒரு வருடத்துக்கு  முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த அடல்தாஸ் என்ற சுஜை (32), அமல் பஸ்வான்  (30) ஆகிய 2 பேரும் வேலைபார்த்தனர். திடீரென 37 பவுன் நகைகளை  கொள்ளையடித்துவிட்டு 2 பேரும் தப்பி சென்றனர்.

இதுதொடர்பாக மனோஜ்  மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்  வினிஸ் பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு  பிறகு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரில் அமல் பஸ்வானை மட்டும்  கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில், அமல் பஸ்வானின் கூட்டாளியான  அடல் தாஸ் நகைகளுடன் மேற்கு வங்காளத்துக்கு தப்பி சென்றது தெரியவந்தது.  இதையடுத்து மேற்கு வங்காள போலீசார் உதவியை, மார்த்தாண்டம் போலீசார்  நாடினர். இப்படியே ஒரு வருடம் கடந்த நிலையில், சமீபத்தில்  மேற்குவங்காளத்தில் அடல் தாஸ் பிடிபட்டிருப்பதாக மேற்கு வங்க போலீசார்  தகவல் அளித்தனர்.

அதன்பேரில் தனிப்படை போலீசார் 2 நாட்களுக்கு முன்பு  மேற்கு வங்காளத்துக்கு சென்றனர். அங்கிருந்து அடல் தாஸை கைது செய்து  மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து எந்த  நகைகளும் மீட்கப்படவில்லை. கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் தனது சொந்த  ஊரிலேயே விற்று பணமாக்கி ஆடம்பர பொருள் வாங்கி குவித்ததோடு உல்லாச வாழ்க்கை  நடத்தியதாக அடல் தாஸ் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அடல் தாசை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

போலீஸ் எச்சரிக்கை

மார்த்தாண்டத்தில்  உள்ள நகை, ஜவுளிக்கடைகளில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே அதிகம்  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் விவரங்கள் எதுவும் பதிவு செய்யப்படாததால்  குற்ற செயலில் ஈடுபட்டாலும் எளிதில் தப்பி விடுகின்றனர்.எனவே வடமாநில  தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், அவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த போலீஸ் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  இல்லையேல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Robber ,Marthandam , Marthandam: A robber who was absconding in West Bengal after stealing 37 pounds of jewelery from a jewelery workshop in Marthandam was jailed for one year.
× RELATED தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை