×

உள்ளூர் மக்களுக்கு ₹1000 கமிஷன் கொடுத்து நூதனம் போலி வெள்ளி கொலுசுகளை அடமானம் வைத்த 2 பேர் கைது

*சேலத்தில் முலாம் பூசி வாங்கினர்

*ஜோலார்பேட்டை அருகே சிக்கினர்

ஜோலார்பேட்டை : சேலத்தில் முலாம் பூசிய போலி வெள்ளி கொலுசுகளை வாங்கி, உள்ளூர் மக்களுக்கு ₹1000 கமிஷன் கொடுத்து அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேர் ஜோலார்பேட்டை அருகே கைவரிசை காட்டியபோது சிக்கினர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத 2 நபர்கள் வெளியூரில் இருந்து வருவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாக, அப்பகுதி பொது மக்களிடம் வெள்ளி கொலுசை கொடுத்து அருகிலுள்ள நகைக்கடையில் ₹10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்று தருமாறும், அதற்கு நீங்கள் ₹1000 கமிஷன் எடுத்து கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிலர் அந்த கொலுசை பெற்றுக்கொண்டு கடையில் அடமானம் வைத்து பணம் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் பணத்தை வாங்கிக்கொண்டு கடையில் இருந்து அவசர அவசரமாக வெளியில் சென்று உள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் நகை கடையின் உரிமையாளர் அடமானம் வைத்த வெள்ளி கொலுசை சந்தேகத்தின்பேரில் தீவிரமாக சோதனை செய்துள்ளார். அப்போது அடமானம் வைத்தது போலி வெள்ளி கொலுசு என தெரியவந்தது.

இதனையடுத்து நகை கடை ஊழியர்கள் வெள்ளி கொலுசு அடமானம் வைத்த உள்ளூர்  நபர்களிடம் நேரடியாக சென்று தாங்கள் கொடுத்த வெள்ளி கொலுசு போலியானது என தெரிவித்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அந்த மர்ம நபர்களை தேடிச் சென்றனர். அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மோசடி நபர்களை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 2 நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள் சேலம் மாவட்டம்  அம்மணி கொண்டலாம்பட்டி  அடுத்த அரசமரத்துகாட்டூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன்(38), அவரது நண்பர் சேலம் அடுத்த நெத்திமேடு, அழககவுண்டர் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார்(36) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் அச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேலத்தில் குறைந்த செலவில் முலாம் பூசப்பட்ட போலியான  வெள்ளி கொலுசுகளை கடந்த ஒரு மாதமாக பொது மக்கள் மூலம் கொடுத்து அவர்கள் பெயரில் அடமான வைத்து தருபவர்களுக்கு ஆயிரம் கொடுத்து நூதனமாக பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து போலி வெள்ளி கொலுசையும், ₹20 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Nutanam , Jollarpet : Buying fake silver plated necklaces in Salem and paying a commission of ₹1000 to locals.
× RELATED ஆட்டையாம்பட்டி அரசு பள்ளியில் நூதனம்...