×

போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விஷம் குடித்த கூலிதொழிலாளி-சிகிச்சை பலனின்றி சாவு

நெல்லை : போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், நெல்லை நீதிமன்ற வளாகத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பொட்டல்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் சுடலை (45). கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இருவரும் அவரை விட்டு பிரிந்து சென்றதால் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 24-11-2018ல் இதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சுடலையை கைது செய்தனர். பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுடலைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் உஷா ஆஜரானார். வழக்கின் தீர்ப்பையடுத்து கோர்ட் வளாகத்தில் காத்திருந்த சுடலை, திடீரென தான் குளிர்பான பாட்டிலில் கலந்து மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து சுடலையை மீட்டு முதலுதவி கொடுத்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சுடலை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், பாளை. இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாளை. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில்
சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags : POCSO ,Laborer ,Nellie , Nellai: A laborer was poisoned in the Nellai court complex after being sentenced to 10 years in prison in the POCSO case.
× RELATED ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் சரமாரி வெட்டிக் கொலை: 5 பேருக்கு வலை