×

கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் தற்போது பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டாக குறைத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஒப்புதலை பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு எந்த ஒரு ஒப்புதலும் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் விதிகளை திருத்தாமல் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாகவே வைத்து தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் 2018ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த தேர்தல் முதற்கட்டத்தில் 18,468 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2018 மார்ச் 12ம் தேதி முதல் ஆக.11ம் தேதி வரை நடந்தன. அதில் முதல் நிலையில் கடந்த 2018 ஏப்ரல் 3ம் தேதி நடந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அது 2023 ஏப்ரல் 3ம் தேதியுடன் 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. தற்போதைய நிலையில் இதற்கான தேர்தல்களை நடந்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

அதன்படி,  பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள், இதனுடன் சேர்த்து இதர வகையில் உள்ள தேர்தல்கள் 2023 ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
மேலும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ஏதுவாக 5 ஆண்டு முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதனுடன் சேர்த்து புதியதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் இதர வகையில் 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்களின் விவரங்களை சரகம் வாரியாக படிவத்தில் பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக கூட்டுறவு தலைமையகத்திற்கு வரும் 28ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Co-operative Societies , April Election to Co-operative Societies: Circular to All Registrars
× RELATED கூட்டுறவுத் துறை சார்பில் இன்று...