×

தேர்தலை தள்ளிவைத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மேல்முறையீடு: விசாரணையை ஜன.3க்கு ஐகோர்ட் தள்ளிவைத்தது

சென்னை:  தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, பழமையான 1914ம் ஆண்டு சட்டப்படி தேர்தல் நடத்தப்படுவதால் சட்டத்தில் மூன்று மாதங்களில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட்டு அதுவரை தேர்தலை தள்ளி வைக்கவும், மின்னணு முறையில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், மனுவில் எந்த கோரிக்கையும் எழுப்பப்படாத நிலையில் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 25 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் தரப்பில் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை, ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tamil Nadu Medical Council , Tamil Nadu Medical Council's appeal against single judge's order postponing elections: Court adjourns hearing to Jan 3
× RELATED மருத்துவ கவுன்சிலில் டாக்டராக பதிவு...