×

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்: ரூ.734.91 கோடியில் நடக்கிறது: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: ரூ.734.91 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையம் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள்தோறும் 562 ரயில்கள் கையாளப்படுகின்றன.

முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் 24,600 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில் முன்மொழியப்பட்டது. இதை ஏற்று, ரூ.734 கோடியே 91 லட்சம்  மதிப்பில் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையே, கடந்த மே 26ம்தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, எழும்பூர் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, கடந்த ஜூன் 8ம் தேதி தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் எல் அண்டு டி நிறுவனம், டாடா நிறுவனம் உள்ளிட்ட 4 பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரி இருந்தன. இந்த ஒப்பந்தப்புள்ளி  இறுதி செய்யப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஒப்பந்ததாரர் தேர்வு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் செய்ய ஐதராபாத்தைச் சேர்ந்த DEC Infrastructure & Projects India Private Limited என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மறு சீரமைப்பு  பணிகளை 36 மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளை மும்பையை சேர்ந்த டாடா பொறியாளர் ஆலோசனை நிறுவனம் கண்காணிக்க இருக்கிறது.

பிரதான முகப்பு: எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான முகப்பு காந்தி இர்வின் சாலையிலும் பின்புறப் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் முடிவடைகிறது. இந்த இரு பகுதியிலும் ரயில்வே விரிவாக்க மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 1,35,406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டிடம் புதிதாக அமைய இருக்கிறது.

தனித்தனி அரங்குகள்: காந்தி இர்வின் சாலை பகுதியிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றன. பயணிகள் வருகை புறப்பாடு ஆகியவற்றிற்கு தனித்தனியாக அரங்குகள், பார்சல்களை கையாள தனிப்பகுதி, நடைமேம்பாலங்கள், அடுக்கக வாகன காப்பகங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன. தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல மின் தூக்கி, எஸ்கலேட்டர் அமைய இருக்கின்றன.

விமான நிலையம் போன்று...: விமான நிலையத்தில் இருப்பது போல பயணிகள் வருகை புறப்பாடு தனித்தனியாக பிரிக்கப்பட்டு நடைமேடை காத்திருப்பு அரங்கு, வெளிப்புறப் பகுதி ஆகியவற்றிற்கு எளிதாக செல்லும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. போக்குவரத்து வசதி: பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்குதடையின்றி ரயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளி வளாகப்பகுதி அமைய இருக்கிறது.

அடுக்கு பார்க்கிங்: மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், குடிதண்ணீர் குழாய்கள், குளிர் குடிநீர் வசதி, மேற்கூரைகள், இருக்கைகள், லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட இருக்கின்றன. கார்கள், வாடகை கார்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக் ஷாக்கள் நிறுத்தும் வகையில் அடுக்கு பார்க்கிங் வசதிகள்  அமைய உள்ளன. பயணிகள் தனித்தனி பகுதிகளில் இருந்து வந்து சேர 3 நடைமேம்பாலங்கள் அமைகின்றன.

தற்போதைய பணிகள்: மரங்கள் மற்றும் பயன்பாட்டு பகுதி, நிலப்பரப்பு கணக்கெடுப்பு, பார்சல் அலுவலகம், நடை மேம்பாலங்கள், காத்திருப்பு அரங்கு, இருபுறமும் வாகன  அமைய நிலப்பரப்பு தேர்வு, மண் பரிசோதனைக்காக பல்வேறு இடங்களில் ஆழ்துளை சோதனை, கட்டுமான நிறுவன அலுவலகம் கட்டுதல், கழுகு பார்வை கணக்கெடுப்பு, பணிக்காக அருகிலுள்ள ரயில்வே குடியிருப்புகளை அகற்றுவது போன்ற பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் தள அலுவலக கட்டுமானம் நடந்த வருகிறது.

Tags : Egmore Railway , Egmore Railway Station Renovation Work Begins: l In progress at Rs.734.91 Crore l Southern Railway Information
× RELATED மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா;...