×

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து ஆம்னி பஸ், ரயில் கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்வு

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்து, விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக, நேற்று முதலே ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
 
தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பில் நேற்று 300 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன. அதேபோல், இன்று 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் வருவதற்கும் போதுமான பேருந்துகள் இயக்க தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் ஏற்கனவே அரசு பேருந்துகள், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், அரசு பேருந்துகளில் டிக்கெட் இல்லாதவர்கள் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கின்றனர். குறிப்பாக, இதுபோன்ற பண்டிகைக்கால நேரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை அதிகப்படியாக வசூலித்து வருகின்றனர்.

அந்தவகையில், கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துக்கு வழக்கமாக ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. அதேபோல் குளிர்சாதன வசதி உடைய செமி சிலீப்பருக்கு ஒரு சில பேருந்துகளில் ரூ.3,500, ரூ.4000ம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு குளிர்சாதன சிலீப்பர் பேருந்துக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு சில பேருந்துகளில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ரூ.1200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமையிலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்வு குறித்து புகார் தர எண்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அதில் யாரும் அதிகமாக புகார் தர முன்வருவதில்லை. காரணம், பண்டிகை காலங்களில் எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிக பணம் கொடுத்து பயணம் செய்கின்றனர். இதுபோல, விமான டிக்கெட் கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5,400 இருந்தது. ஆனால் தற்போது ரூ.14,500 வரை என 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், மதுரைக்கு ரூ.3,600 இருந்தது. தற்போது ரூ.12000 முதல் ரூ.14,000 வரை உள்ளது. கோவைக்கு ரூ.3,500 இருந்தது. தற்போது ரூ.8,000 முதல் ரூ.13,500 வரை அதிகரித்துள்ளது.

திருச்சிக்கு ரூ.3,500 கட்டணம் இருந்தது. தற்போது ரூ.6,500 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. கொச்சிக்கு ரூ.3,500 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திற்கு ரூ.5,150ல் இருந்து ரூ.12,000 முதல்ரூ.21,000 வரை அதிகரித்துள்ளது. மேலும், ரயில்களில் பயணம் செய்ய ப்ரீமியர் தட்கல் டிக்கெட் கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Omni ,Christmas ,New Year , Omni bus and train fares go up at a rocket pace following the Christmas and New Year holidays
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி