சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் சக்தி மாலை இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா நேற்று தொடங்கி, வரும் பிப். 4ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும், பிப். 5ம் தேதி தைப்பூச ஜோதி விழா விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்காரு அடிகளார், தைப்பூச ஜோதியை ஏற்றி வைக்கிறார். இதனிடையே, சித்தர் பீட வளாகத்தில் நேற்று காலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு இயற்கை வழிபாடுகள் நடைபெற்றது.
காலை 4.45 இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கலந்து கொண்டு சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்தார். பின்னர், இருமுடி செலுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதலில் 9 சிறுமிகளும், 9 தம்பதிகளும் அபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து சக்தி மாலை அணிந்து மூன்று அல்லது ஐந்து நாட்கள் விரதம் இருந்து நேற்று சித்தர் பீடம் வந்த ஒரு லட்சம் பக்தர்கள் இருமுடி செலுத்தினார். மேலும், மார்கழி அமாவாசை தினமான நேற்று சித்தர்பீடத்தில் வேள்வி பூஜை நடைபெற்றது. இந்த வேள்வியை ஆன்மிககுரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.
சித்தர் பீடத்தில் 44 நாட்கள் நடைபெற உள்ள இருமுடி விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து சித்தர்பீடம் வந்து இருமுடி செலுத்தவுள்ளனர். இதில், கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவையொட்டி, மேல்மருவத்தூரில் தகவல் மையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம், முதலுதவி, ஆம்புலன்ஸ் உதவி, சுகாதாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர்கள் கோ.பா.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்ட செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.