தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த 21ம் தேதி தூத்துக்குடியில் நடந்தது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் எம்பியும், தற்போதைய பாஜ மாநில துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் விதமாக, அவதூறாக பேசினார். சசிகலா புஷ்பாவின் இந்த மிரட்டல் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக. இளைஞர் அணி நிர்வாகி சீனிவாசன், தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சசிகலா புஷ்பா மீது இந்திய தண்டனை சட்டம் 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்), 505(2) (தேவையற்ற கருத்துக்களை பேசி பீதியை ஏற்படுத்துதல்), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வடபாகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
