அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட் வணிக மையமாக மாற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவொற்றியூர்: அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட் பெரிய வணிக மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் இரும்பு மார்க்கெட் செயல்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் சுமார் ரூ.15 கோடி செலவில் 203 ஏக்கர் நிலப்பரப்பளவில் கடந்த 1991ம் ஆண்டு இரும்பு மார்க்கெட் அமைக்கப்பட்டது. இரும்பு மற்றும் எஃகு தொழில் செய்பவர்களுக்கு வசதியாக 850 மனை பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அதில் 719 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த இரும்பு மார்க்கெட் 2007ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. ஆனாலும், ஒதுக்கீடு பெற்ற இரும்பு வியாபாரிகள் பலர் இங்கு போதிய வசதி இல்லாததால் வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, இந்த சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட்டை முழுமையாக செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் தீர்மானித்தனர். இதன்படி, சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட் பகுதியை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை வளர்ச்சி குழுமம் அதிகாரிகளுடன் நேற்று நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கட்டமைப்பு, அடிப்படை வசதி போன்றவைகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட் அமைக்கப்பட்டதால் வியாபாரிகளுக்கும், பெருநகர வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கு உதவியாய் அமைந்தது. இந்த இரும்பு மார்க்கெட்டில் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ள 131 மனைகளை ஒதுக்கீடு செய்யவும், ஒதுக்கீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்படாமல் உள்ள 184 மனைகளை பதிவு செய்ய அவகாசம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரும்பு மார்க்கெட்டை முழுமையாக செயல்படுத்த இங்கே மழைநீர் கால்வாய், மருத்துவ வசதி, வாகனங்கள் பழுதுபார்க்கும் மையம், எலக்ட்ரானிக் எடை மேடை, துணை மின் நிலையம், உணவகம், 52 இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமான நுழைவாயில் அமைப்பதற்கான திட்ட வரவு தயாரிக்கப்பட உள்ளது.

அடுத்த, 3 ஆண்டுகளில் இந்த சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட் பெரிய வணிக மையமாகவும், தொழில் முனைவோருக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதற்கு, தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் மாதவரம், எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அன்சுல்மிஸ்ரா, அதிகாரிகள் லட்சுமி, பரிதாபானு, மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், பகுதி செயலாளர் வை.ம.அருள் தாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: