×

திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த விவகாரம் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்: எஸ்ஐ உள்பட 4 பேர் பணியிட மாற்றம்; டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

பெரம்பூர்: செல்போன் திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட வாலிபர் சந்தேகமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பெண் உதவி ஆய்வாளர் உட்பட 4 போலீசாரை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பெரம்பூர் நீளம் தோட்டம் 3வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26), கூலி தொழிலாளி. இவர், மனைவி கவுசல்யா மற்றும் மகள் வினோதினி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 20ம் தேதி காலை இவர், தனது நண்பரான  ராமசந்திரன் என்பவருடன் (எண்:119) மாநகர பேருந்தில் துரைப்பாக்கம்  சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ராமசந்திரன் பேருந்தில் இருந்த ஸ்டீபன் கிளோடியா என்பவரிடம் செல்போன்  பறித்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. செல்போன்  காணாமல் போனதை உணர்ந்த ஸ்டீபன், ஓ.எம்.ஆர் சீவரம் அருகே பேருந்தை நிறுத்தி, சந்தேக நபரான தினேஷ்குமாரை பிடித்து ரோந்து பணியிலிருந்த துரைப்பாக்கம்  போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த, திருட்டு சம்பவம் தொடர்பாக  தினேஷ்குமாரிடம், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தி அவரது  மனைவியான கவுசல்யாவை வைத்து, திருடிய செல்போனை ராமசந்திரனிடமிருந்து  போலீசார் மீட்டுள்ளனர். அப்போது, புகார் வேண்டாமென ஸ்டீபன் கூறியதால் தினேஷ்குமாரிடம் எழுதி வாங்கி கொண்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் இரவு 9:30 மணிக்கு ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தினேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த தினேஷ்குமாரின் அண்ணன் செந்தில்குமார், துரைப்பாக்கம் போலீசார் தாக்கியதால்தான் தினேஷ்குமார் இறந்ததாக திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

இதனிடையே, தினேஷ்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால், இந்த வழக்கை எழும்பூர் 5வது மாஜிஸ்திரேட் ஜெகதீசன் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து 2 நாட்களுக்கு முன், ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற மாஜிஸ்திரேட் ஜெகதீசன், தினேஷ்குமாரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரது மேற்பார்வையில், வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அவரது மனைவி கவுசல்யா மற்றும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வர சில நாட்கள் ஆகும் என்பதால் தொடர்ந்து மாஜிஸ்திரேட் இந்த வழக்கை விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தினேஷ்குமாரின் உடலை பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் திருவிக நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று சடங்குகளை முடித்து பல்லவன் சாலையில் உள்ள தாங்கள் இடுகாட்டில் அவரது உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், தினேஷ்குமாரிடம் விசாரணை நடத்திய துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, ராஜாமணி, தலைமை காவலர் பார்த்தசாரதி, காவலர் சந்திரசேகரன் ஆகியோரை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீஸ் விசாரணையின்போது மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags : CBCID ,SI ,DGP ,Shailendrababu , Death of youth investigated in theft case transferred to CBCID: 4 including SI transferred; DGP Shailendrababu action order
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...