×

சிக்கிம் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்து; 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி: சிக்கிம் மலைப்பகுதியில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சேட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற பகுதியை நோக்கி ராணுவ வீரர்கள் 3 வாகனங்களில் நேற்று சென்று கொண்டிருந்தனர். ஜெமா என்ற பகுதியில் வந்த போது ஆபத்தான வளைவில் வாகனங்கள் திரும்பிய போது, ஒரு வாகனம் எதிர்பாராத விதமாக செங்குத்தான சரிவில் உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் அந்த  வாகனம் நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3 ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 13 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக ராணுவம் விடுத்த அறிக்கையில், ‘‘விபத்தில் 16 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின. காயமடைந்த 4 வீரர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. துயரமான இந்த நேரத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ராணுவம் உறுதியாக நிற்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், ‘விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என கூறி உள்ளார். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ‘சிக்கிமில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பதிவில், ‘துணிச்சலான குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ என கூறி உள்ளார்.

Tags : Sikkim Valley ,President ,PM , Vehicle overturns in Sikkim Valley; 16 soldiers killed: President, PM condole
× RELATED சொல்லிட்டாங்க…