×

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750 படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் கைகாலா சத்தியநாராயணா காலமானார்..!!

ஆந்திரா: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750 படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் கைகாலா சத்தியநாராயணா காலமானார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் கைகாலா சத்தியநாராயணா. 1959ம் ஆண்டில் தெலுங்கில் நடிகராக அறிமுகமான இவர், கன்னடம், தமிழ், இந்தி மொழிகளில் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1977ம் ஆண்டு என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான எமக்கோலா படத்தில் எமதர்ம ராஜாவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் கைகாலா சத்தியநாராயணா.

என்.டி.ஆர். ஹீரோவாக நடிக்க தொடங்கிய காலத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். ரங்காராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, மோகன்பாபு, நாகர்ஜுனா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர். என பல தலைமுறை நடிகர்களுடன் வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்ற பெருமையை கொண்டவர். தமிழில் கமலஹாசனின் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ரெட்டி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சின்ன கண்ணு பெத்த லாபம் என்ற அவர் பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

பெரியார் படத்தில், பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இவரது கடைசி திரைப்படம் மகரிஷி. இந்த திரைப்படம் 2019ல் வெளியானது. 1996ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஹைதராபாத்தில் தங்கி வந்த சத்தியநாராயணா, இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு தென்னிந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Tags : Kaikala Satyanarayana , Famous Telugu actor Kaikala Satyanarayana passed away
× RELATED புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா...