நெருங்குகிறது தமிழர் திருநாள் பொங்கல் பானை தயாரிக்கும் பணி விறுவிறுப்பு-நவீன உலகிலும் பரம்பரை தொழிலை விடாத தொழிலாளர்கள்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே ராயபுரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் மண் பாண்டங்கள்.திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ராயபுரம், வீரவநல்லூர், வடகாரவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கு மண் பாண்டங்களான பானை, சட்டி, அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையன்று புது பாத்திரமான மண் பானைகளில் பொங்கல் வைத்து படையல் போடுவது தமிழரின் பண்பாடு.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பெறும்பாலும் கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன் தேவையான மண் பாண்டங்களை முன்கூட்டியே வாங்கி வைத்து வீடுகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்தது. தற்போது பொங்கல் வைக்க பித்தலை, சில்வர் போன்ற பாத்திரங்களை பயன் படுத்துவதால் மண்பாண்ட தொழில் பாதிப்படைந்தது. சிலர், மண் பாண்டங்களிலேயே இன்றும் பொங்கல் வைத்து வருகின்றனர்.

சமீப காலமாக மண்பாண்டங்கள் தயாரிக்க தேவைப்படும் மணல், வண்டல், வெள்ளை நைஸ் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், பரம்பரை தொழிலான மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை விட முடியாமல் தொழிலாளர்கள் பல்வேறு சிரமத்துடன் செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு வேறு தொழிலும் தெரியாமல் உள்ளனர். குழந்தைகளையாவது நல்லபடியாக படிக்க வைக்க வைத்து வேறு தொழில் செய்ய அனுப்புவதை குறிக்கோலாக இப்பணியை செய்து வருகின்றனர். மண் பாண்டங்கள் மட்டுமின்றி அகல் விளக்கு, திருமணத்திற்கு தேவையான அரசாணி பானைகள், விளக்கு மாடம், மாட்டிற்கு தண்ணீர் வைக்கும் தொட்டி, வீட்டிற்கு தேவைப்படும் தண்ணீர் தொட்டி, கோயிலுக்கு குதிரை சிலைகள், விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை செய்து வருகின்றனர்.

இந்திலையில் ராயபுரம் கிராமத்தில் ராமையன் சரோஜா தம்பதிகள், சுப்ரமணியன், தங்கராசு, மகாலிங்கம், ராகவன் உள்ளிட்ட பலர் மண்பாண்டங்களும், வேதநாயகன், தங்கதுரை, தேவராஜ், சண்முகம், கணேசன் உள்ளிட்ட பலர் சிற்பங்கள், கோயில் குதிரைகள், விநாயகர் சிலைகள், பொம்மைகள் செய்து வருகின்றனர்.ராயபுரத்தில் அனைவரும் ஓரே தெருவில் ஒற்றுமையாக மண்பாண்டங்களை செய்து வருகின்றனர்.இதுகுறித்து ராமையன் சரோஜா(முதியவர்கள்) தம்பதிகள் கூறுகையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்ததால் இந்த மண்பாண்ட தொழில் மிகவும் பாதிப்படைந்து சிரமத்தில் உள்ளோம். இந்த ஆண்டாவது தொழிலை செய்யலாம் என்றால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தயாரிக்கும் மண் பாண்டங்கள் வெயில் அடித்தால்தான் காயவைத்து வர்ணம் பூசி சூலையில் வைக்க முடியும். சூலையும் இடிந்து பழுதாகியுள்ளது. சூலையில் வைப்பதற்கு ராட்டி, விரகு, வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல தட்டுப்பாடுகள் ஏற்பட்டால் நாங்கள், எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். எங்களுடைய பரம்பரை தொழிலான மண்பாண்ட தொழிலை ஓரளவாவது பாதுகாத்து செய்ய தமிழக முதல்வர் எங்களுக்கு வழிகாட்டி எங்கள் குடும்பங்கள் வளர மானியத்தில் வங்கி கடன் தர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: