×

நீலகிரியில் மரக்கடத்தல் கும்பல் நடமாட்டம்-கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

குன்னூர் :  நீலகிரியில் அதிகரிக்கும் மரக்கடத்தல் கும்பல் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தேயிலை செடிகளுக்கு இடையே ஊடு பயிராக மரங்கள் மற்றும் காப்பி உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். மரங்கள் வளர்ந்ததும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல நீலகிரியில் உள்ள காடுகளில் சோலை மரங்கள் அதிகமாக உள்ளது.  

குறிப்பிட்ட சில வனப்பகுதியில் சந்தன மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். விலை உயர்ந்த மரங்கள் கூடலூர் குன்னூர் கோத்தகிரி மற்றும் உதகை உள்ளிட்ட இடங்களில் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் அதிகளவில் கற்பூர மரங்கள் நீலகிரி மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டது. நூற்றாண்டு கழிந்த நிலையில் தற்போது அந்த மரங்கள் அனைத்தும் வான் உயர வளர்ந்து காணப்படுகிறது. பட்டா நிலங்களில் உள்ள மரங்களை குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வன உரிமைச் சட்டத்தை மீறி மரங்களை வெட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் வனத்துறை அமைச்சர் இலாகா மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் மரங்கள் வெட்டி கடத்துவது அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பகல் நேரத்தில் மரங்களை வெட்டி இரவு நேரம் வரை காத்திருந்து நள்ளிரவில் மரங்களை லாரி மூலம் கடத்தி செல்வதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கேத்தி, அச்சணகல், கெக்கட்டி கரும்பாலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தினசரி நள்ளிரவில் மரங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து உரிய அனுமதி பெறாமல் வன உரிமைச் சட்டத்தை கடைப்பிடிக்காமல் செயல்பட்டு வரும் மரக்கடத்தல் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : Nilgiris , Coonoor: The district administration should take steps to control the increasing movement of timber smuggling gangs in the Nilgiris, according to the public.
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...