×

குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்-போலீசார், வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை

பள்ளிகொண்டா :  பள்ளிகொண்டாவில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.  
வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க சோதனைகள் கடுமையாக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.  

அதன்படி பள்ளிகொண்டாவில் உள்ள மொத்த சில்லறை விற்பனை கடைகளில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய சோதனையில் 16 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பள்ளிகொண்டா பகுதிகளில் உள்ள அனைத்து பெட்டிக்கடை, மளிகைகடை, பலசரக்கு கடைகள் என சுமார் 35 கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் அணைக்கட்டு, வேப்பங்குப்பம் போலீசார் என 25க்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் பள்ளிகொண்டா மெயின் பஜார், சாவடி, அகரம்சேரி, வெட்டுவாணம், கந்தனேரி, கோவிந்தம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 35 கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுஜாதா(35) என்பவருக்கு சொந்தமான டீ மற்றும் பெட்டிகடையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் அகரம்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுஞ்செழியன்(54) என்பவருக்கு சொந்தமான ஆற்காடு தாபா ஓட்டலில் 5 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் விநாயகம்(58) என்பவரது பெட்டிகடையில் விற்பனைக்காக வைத்திருந்த 15க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கடைக்கு வருவாய்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோன்று 35 கடைகளில் சோதனையிட்டதில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 கடைகளுக்கு பள்ளிகொண்டா விஏஓ ஞானசுந்தரி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் சீல் வைத்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பள்ளிகொண்டா பகுதிகளில் 35 கடைகளில் ஒரே நேரத்தில் போலீசார் ரெய்டு நடத்திய சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நெடுஞ்சாலையோரம் உள்ள அனைத்து தாபா ஓட்டல்களிலும் மது உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 24 மணி நேரமும் உரிமம் இல்லாத பாராக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்ற
னர். இதனால் இரவு நேரத்தில் ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டும்  என்று மக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : gutka ,hans , Pallikonda: Police and revenue department raided 3 shops selling drugs including gutka, hans in Pallikonda.
× RELATED லாரியில் கடத்தி வந்த 17 மூட்டை குட்கா பறிமுதல்