தேயிலை தோட்டத்தை சேதப்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது விவசாயி புகார்

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள மணிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (71). நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமாக மணிக்கல் மட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ராஜுவின் அனுபோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இவரது தேயிலை தோட்டத்தை ஒட்டி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனின் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்க வேண்டி தேயிலை தோட்டத்தில் உள்ள செடிகளை மினி ஜேசிபி (குப்பட்டா) மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. அப்போது புத்திசந்திரனின் தோட்டத்தை ஒட்டியுள்ள தோட்டத்தில் இருந்த சுமார் 300 தேயிலைச்செடிகளை சேதப்படுத்தியதாக அதன் உரிமையாளர் ராஜூ புகார் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அனுமதி பெறாமல் மினி ஜேசிபி பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவர் தினேஷ்குமார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் மஞ்சூர் போலீசில் புகார் அளித்தார்.

அதில், ‘‘தேயிலை செடிகளை அகற்ற அனுமதி பெற்று பயன்படுத்தி வந்த நிலையில் வேறு சர்வே எண்களை கொண்ட நிலத்தில் மினி ஜேசிபி பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட மினி ஜேசிபியின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் இருந்து சாவி பெறப்பட்டது. குப்பட்டா இயந்திரம் இரவு நேரத்தில் பயன்படுத்தியது மற்றும் அனுமதி வழங்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடத்தில் இயந்திரத்தை பயன்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனிடம் கேட்டபோது, ‘‘எனது தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள தோட்டத்தை எனது பகுதியை சேர்ந்த ஒருவர் என்னிடம் விற்பனை செய்துள்ளார். அந்த இடத்தை அவரது உறவினர் தனக்கு சொந்தமானது என கூறி பிரச்னை செய்து வருகிறார். இது சம்பந்தமாக என்னிடம் வந்தபோது உங்களுக்குள் உள்ள பிரச்னை நீங்களே தீர்த்து கொள்ள வேண்டும். ஒன்று இடத்தை தர வேண்டும் அல்லது நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என எனக்கு நிலத்தை விற்பனை செய்தவரிடம் தெரிவித்து விட்டேன்’’ என்றார்.

Related Stories: