×

காஞ்சிபுரம் சிறுமிகள் 5 பேர் பலாத்கார வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளர்-மனைவி மகன் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரி:  புதுச்சேரி  மாநிலம் வில்லியனூர் அருகே காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  வாத்துப்பண்ணை உரிமையாளர், அவரது மனைவி, மகன் உட்பட 8 பேருக்கு ஆயுள்  தண்டனை  விதித்து  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி மாநிலம்  வில்லியனூர் அடுத்த  கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன்.  இவர் வாத்து பண்ணை  வைத்திருந்தார்.  அங்கு காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு  பகுதியை சேர்ந்த 6  முதல் 15 வயதுடைய 5 சிறுமிகளை ரூ.3 ஆயிரத்துக்கு  விலைக்கு வாங்கி  வந்து, வாத்து மேய்க்கும் தொழிலில்  ஈடுபடுத்தினார்.  குழந்தைகள் நலக்குழுவுக்கு கடந்த  2020ம் ஆண்டு மார்ச் மாதம் புகார்  வந்தது. இதையடுத்து அங்கு சென்ற  குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் 5  சிறுமிகளை மீட்டு குழந்தைகள்  காப்பகத்தில் சேர்த்தனர்.

தொடர்ந்து  சிறுமிகளிடம் விசாரித்தபோது,   சிறுமிகளை பாலியல் பலாத்காரம்  செய்திருப்பதும், சில சிறுமிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுத்திருப்பதும்  தெரியவந்தது. குழந்தைகள் நலக்குழு புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, வாத்து பண்ணை உரிமையாளர்  கன்னியப்பன், மனைவி சுபா,  மகன் சரத்குமார், சுபாவின் தந்தை காத்தவராயன்,  உறவினர்கள் ராஜ்குமார்,  பசுபதி, சிவா, ஆறுமுகம், மூர்த்தி, வேலு மற்றும் ஒரு  சிறுவன் என 11 பேரை  போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கை புதுச்சேரி போக்சோ சிறப்பு  நீதிமன்ற தலைமை நீதிபதி  செல்வநாதன் விசாரித்து, கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், பசுபதி,  சிவா, மூர்த்தி  ஆகிய 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், காத்தவராயன், சுபாவுக்கு ஆயுள்  தண்டனையும்,  ஆறுமுகத்துக்கு 10  ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.  பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ. 7 லட்சமும், மற்ற 4 சிறுமிகளுக்கு ரூ. 5 லட்சமும் ஒன்றிய அரசின் நிர்பயா நிதியில் இருந்து இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேலு என்பவர், இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறுவன் சீர்த்திருத்த பள்ளியில் உள்ளார்.

Tags : Kanchipuram , Kancheepuram rape of 5 girls, 8 including duck farm owner-wife's son jailed for life
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்