×

திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் முன்னாள் எம்பி மஸ்தான் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: முன்னாள் எம்பி மஸ்தான்  உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளருமாக இருந்தவர் டாக்டர் மஸ்தான் (66). 1995ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்பியாக இருந்தார். இவர்  ராயப்பேட்டை பாலாஜி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் மஸ்தான் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை ெதாடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மஸ்தானின் உடல் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர் சிற்றரசு உடனிருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழக தொண்டராக பணியாற்றிய மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்-கழகத்தினருக்கும் - சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகன் நிச்சயதார்த்தம்: மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மாலை நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



Tags : DMK ,Rights ,Wing ,Former ,Mastan Sudden ,Chief Minister ,M.K.Stalin , DMK Minority Rights Wing Secretary Former MP Mastan Sudden Death: Chief Minister M.K.Stalin's Tribute
× RELATED இந்திய நாட்டுக்கே வழிகாட்டிடும்...