புதுடெல்லி: குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 14ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில்,நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையிலும் நேற்று இந்த மசோதா நிறைவேறியது.
இதன் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா பேசுகையில்,‘‘ இந்த சமூகத்தினர் குறைந்த அளவே உள்ளனர். அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளான பின்பும் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை’’ என்றார். அதிமுக எம்பி தம்பித்துரை பேசுகையில்,‘‘ தமிழகத்தில் உள்ள மீனவர்கள் உள்ளிட்ட சில சமூகங்களை பழங்குடியினராக்க வேண்டும் என்றார்.திருச்சி சிவா(திமுக)பேசுகையில்,‘‘இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. வரும் காலங்களில் இந்த சமூகத்தினரின் வாழ்வு சிறப்படையும்’’ என்றார்.