‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் 257 காவலர்களிடம் மனு வாங்கினார்: இன்றும் குறைகளை கேட்கிறார்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களிடம் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ என்ற திட்டதின் கீழ் 257 காவலர்களிடம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரடியாக புகார் மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

 சென்னை மாநகர காவல்துறையில் 22 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். எனவே காவலர்களின் குறைகளை மற்றும் புகார்கள் தொடர்பாக மனுக்கள் பெறும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் தொடங்கியது. முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பிறகு அவரே நேரடியாக மனுக்களை கொண்டு வந்த போலீசாரிடம், குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

இந்த குறை தீர்வு முகாமில் மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர், பணியிடமாறுதல், பதவி உயர்வு, துறை ரீதியான நடவடிக்கைகள் நீக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போலீசார் தங்களது மனுக்களாக கொண்டு வந்தனர்.

பிறகு போலீசார் தங்களது மனுக்களை வரிசையில் நின்று போலீஸ் கமிஷனர் சங்கா ஜிவாலிடம் நேரடியாக கொடுத்தனர். அவர் அனைவரிடமும் மனுக்களை பணிவோடு பெற்றுக்கொண்டு புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் போலீசாருக்கு உத்தரவிட்டார். பெண் காவலர்கள் பலர் கை குழந்தைகளுடனும் மனு அளித்தனர். சிலர் கர்ப்பிணி காவலர்களும் புகார்கள் அளித்தனர்.

முதல் நாளான நேற்று மொத்தம் 600 போலீசார் புகார் மனுக்கள் கொடுக்க காத்திருந்தனர். அவர்களில் பெண் காவலர்கள் உட்பட 257 காவலர்களிடம் நேற்று இரவு வரை கமிஷனர் இடைவெளி இல்லாமல் புகார் மனுக்களை பெற்று கொண்டார். மீதமுள்ளவர்களிடம் இன்று காலை 10.30 மணி முதல் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மனுக்களை பெறுகிறார்.

Related Stories: