×

பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்: 87 இடத்துக்கு 405 பேர் போட்டி

கொச்சி: ஐபிஎல் டி20 தொடரின் 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம், கொச்சியில் இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமான டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், இந்த சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது. எதிர்வரும் சீசனில் களமிறங்க உள்ள 10 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களை இறுதி செய்து ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், மொத்தம் 87 இடங்களை நிரப்புவதற்கான ஏலப் பட்டியலில் 405 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் இந்தியாவை சேர்ந்த 273 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 132 பேரும் உள்ளனர்.

அதிகபட்சமாக ரூ.42.25 கோடி கையிருப்பு தொகை வைத்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 உள்ளூர் வீரர்கள், 4 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 13 பேரை ஏலத்தில் எடுக்க உள்ளது. வெறும் ரூ.7.05 கோடி மட்டுமே கைவசம் வைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர் உள்பட இன்னும் 11 பேரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனை தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் வசம் (ரூ.16.25 கோடி, 2021) வசம் உள்ளது. அடுத்த இடத்தில் இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் (ரூ.16 கோடி, 2015) உள்ளார். இந்த நிலையில், இன்று நடைபெறும் ஏலத்தில் இந்த சாதனை முறியடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த மினி ஏலத்துக்கான அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பிரிவில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன், ஆஸ்திரேலியாவின் கேமரான் கிரீன் உள்பட 19 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷாகிப் அல் ஹசன், ஹாரி புரூக், டேவிட் மலான் உள்பட 11  வெளிநாட்டு வீரர்கள், அடிப்படை விலை ரூ.1.5 கோடி பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கேம்ரான் கிரீன் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. எனவே, இவர்களில் ஒருவரே அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் சாதனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இது தவிர ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் என அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே டிராபி தொடரில் தொடர்ச்சியாக 5 சதம் விளாசி அசத்திய தமிழக அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம் மட்டுமே.

ஐபிஎல் அணிகளின் வீரர்கள் தேவை…
எண்    அணி    மொத்த காலியிடம்    வெளிநாட்டு வீரர்    கையிருப்பு தொகை
1    சன்ரைசர்ஸ் ஐதராபாத்    13    4    ரூ.42.25 கோடி
2    பஞ்சாப் கிங்ஸ்    9    3    ரூ.32.20 கோடி
3    லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்    10    4    ரூ.23.35 கோடி
4    மும்பை இந்தியன்ஸ்    9    3    ரூ.20.55 கோடி
5    சென்னை சூப்பர் கிங்ஸ்    7    2    ரூ.20.45 கோடி
6    டெல்லி கேப்பிடல்ஸ்    5    2    ரூ.19.45 கோடி
7    குஜராத் டைட்டன்ஸ்    7    3    ரூ.19.25 கோடி
8    ராஜஸ்தான் ராயல்ஸ்    9    4    ரூ.13.20 கோடி
9    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்    7    2    ரூ.8.75 கோடி
10    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்    11    3    ரூ.7.05 கோடி

‘காஸ்ட்லி’ வீரர்… இதுவரை!
ஆண்டு    வீரர்    தொகை
2008    எம்.எஸ்.தோனி    ரூ.6 கோடி
2009    பீட்டர்சன் & பிளின்ட்டாப்    ரூ.7.55 கோடி
2010    ஷேன் பாண்ட் & போலார்டு    ரூ.3.42 கோடி
2011    கவுதம் கம்பீர்    ரூ.11.40 கோடி
2012    ரவீந்திர ஜடேஜா    ரூ.9.72 கோடி
2013    கிளென் மேக்ஸ்வெல்    ரூ.5.30 கோடி
2014    யுவராஜ் சிங்    ரூ.14 கோடி
2015    யுவராஜ் சிங்    ரூ.16 கோடி
2016    ஷேன் வாட்சன்    ரூ.9.50 கோடி
2017    பென் ஸ்டோக்ஸ்    ரூ.14.50 கோடி
2018    பென் ஸ்டோக்ஸ்    ரூ.12.50 கோடி
2019    உனத்கட் & வருண்    ரூ.8.4 கோடி
2020    பேட் கம்மின்ஸ்    ரூ.15.50 கோடி
2021    கிறிஸ் மோரிஸ்    ரூ.16.25 கோடி
2022    இஷான் கிஷன்    ரூ.15.25 கோடி

Tags : IPL ,Kochi , IPL players auction starts at 2.30 pm in Kochi today: 405 players compete for 87 spots
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி