×

ஓ.பன்னீர்செல்வம் மூலம் பாஜக விளையாட்டு காட்டுவதால் தனித்துப் போட்டியிட தயாராகும் எடப்பாடி:40 தொகுதிகளுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை ஏஜென்சியிடம் ஒப்படைத்தார்

சென்னை: தமிழகத்தில் 4 பிரிவாக உள்ள அதிமுகவில் பன்னீர்செல்வம் அணி மூலம் தனக்கு இடையூறு செய்ய நினைக்கும் பாஜவை கழட்டி விட்டு விட்டு தனித்தோ, தனது ஆதரவு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 40 தொகுதிகளுக்கும் இப்போதே வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை தனியார் ஏஜென்சியிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக பிரிந்துள்ளது. அதில் டிடிவி தினகரன் மட்டும் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர்.

3 பேரும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் முடிவுக்காக இருவரும் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில், தமிழகத்தில் திமுக மக்களிடம் செல்வாக்காக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடம் தனிப்பட்ட மரியாதை கூடியுள்ளது. தற்போது ஆளும் கட்சியாகவும் உள்ளது. இதனால் திமுகவை அதிமுக, பாஜகவால் மட்டுமே எதிர்க்க முடியாது. இந்தநிலையில் அதிமுக 4 அணிகளாக பிரிந்தால் எப்படி எதிர்க்க முடியும். இதனால் 4 அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக கூறிவிட்டது.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. நாங்கள்தான் பெரிய அணி, எங்களை மதித்து கூட்டணிக்கு வந்தால் நாங்கள் சில தொகுதிகளை வழங்குவோம். அதில் போட்டியிடுங்கள். தேர்தல் செலவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம். மக்களவை தேர்தல் அதிமுகவுக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை. பாஜகவுக்குத்தான் தேவை. கர்நாடகாவில் பாஜக முன்பு போல உள்ளது. தமிழகம், கேரளாவில் பாஜகவே இல்லை. ஆந்திராவிலும் இல்லை. தெலங்கானாவில் மட்டுமே தற்போது வளர்ந்து வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் பாஜகவுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சீட்டுகளே கிடைக்கும். இதனால் பாஜகவுக்குத்தான் வெற்றி தேவை.

எம்பிக்கள் தேவை. அதனால், எங்கள் தயவுதான் அவர்களுக்கு தேவை. நாங்கள் மக்களவையில் வெற்றி பெற்று, தமிழகத்தில் எதையுமே சாதிக்க முடியாது. இதனால் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒன்றுதான் என்று எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். இதனால் கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களை தேர்தலின்போது பாஜகவுக்கு எந்த அளவுக்கு சீட்டுகளும், மரியாதையும் கொடுத்தோமோ அதே அளவுக்கு தற்போதும் தருகிறோம். ஆனால் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேரக் கூடாது. அவர்களை கழட்டிவிட வேண்டும். அப்படி இருந்தால் கடந்த மக்களவையில் ஒதுக்கிய சீட்டுகளை வழங்குகிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு சம்மதிக்காத பாஜக, 20 சீட்டுகள் வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும். நாங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கிக் கொள்கிறோம். அதிமுக தனித்து 20 சீட்டுகளில் நிற்கலாம் என்று பாஜக கூறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. இதனால், தனித்துப் போட்டியிட இப்போதே தயாராகி வருகிறார். மெகா கூட்டணி என்று வெளியில் சொன்னாலும் தனித்துப் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கிவிட்டார். முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடம் பாஜகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிட்டார். அவர்களும் சம்மதித்து விட்டனர்.

இதனால் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட திட்டம் தீட்டி, தொகுதிகளில் செல்வாக்காக இருக்கும் நபர்களை தேர்வு செய்து அவர்களை போட்டியிட வைப்பதற்கான பணிகளை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவிட்டார். இதற்காக தனியார் ஏஜென்சியிடம் பணிகளை ஒப்படைத்துள்ளார். அந்த நிறுவனம் 40 பேர் பட்டியலை தயாரித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கும். கூட்டணிக்கு பாஜக தன் நிபந்தனைகளை ஏற்று வந்தால் அவர்களுக்கு கடந்தமுறை போல சீட் ஒதுக்கிவிட்டு மீதம் உள்ள இடங்களில் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு பாஜக சம்மதிக்காவிட்டால் 40 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த திட்டம் வகுத்துள்ளார்.

பாஜக வேண்டுமானால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிகளுடன் தனித்துப் போட்டியிடட்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். இதனால் தனித்துப் போட்டியிட அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதோடு பாஜக தன் மீதோ தனது ஆதரவாளர்கள் மீதோ வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை எடுக்கும் நடவடிக்கைகளையும் சமாளிக்கவும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார். இதனால் அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பாஜக தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.


Tags : O. Panneerselvam ,BJP ,Edappadi , By O. Panneerselvam Edappadi prepares to contest alone as BJP sports: 40 constituencies handed over to agency
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...