
உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்பராயன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், உத்திரமேரூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது, பள்ளி வளர்ச்சியின் முக்கிய பங்கு, அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் சென்றடைவதை உறுதி படுத்துவது, பள்ளிசெல்லா குழந்தைகள் இல்லாத நிலையை உருவாக்குவது, மாணவர்கள் கற்றல் திறனை அதிகரிப்பது போன்றவை குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளியின் வளர்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்கு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.