திருத்தணி ரயில் நிலையத்தில் சமூகவிரோத செயல் அரங்கேற்றம்: தடுத்து நிறுத்த பயணிகள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி உள்ள முருகன் கோயில் மற்றும் மத்தூரில் உள்ள அம்மன் கோயில்களுக்கு பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகின்றவர்கள் பெரும்பாலானவர்கள், ரயிலை பயன்படுத்தி திருத்தணி ரயில் நிலையத்துக்கு வந்து பின்னர் பஸ், கார், ஆட்டோக்களில் தங்கள் விரும்பிய இடத்துக்கு சென்று வருகின்றனர். புதுச்சேரி, கடலூர், திண்டிவனம் நாகர்கோவில் மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து  ஏராளமானோர் ரயில்கள் மூலம் காவடிகள் எடுத்துவந்து நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

இதுதவிர, திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேலை, வியாபாரம் விஷயமாக சென்னைக்கு வருகின்ற மக்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் படிப்பதற்காக ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதன்காரணமாக திருத்தணி  ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் திருத்தணி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரம் தெரு, கந்தசாமி கேட் நம்பர் 40 முதல் கமலா தியேட்டர் வரை முதல் பிளாட்பாரம் உள்ளது.

இதில் முதல் பிளாட்பாரத்தில் ரயில்கள் நிற்கும்வரை பிளாட்பாரம்  கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. ஆனால் கந்தசாமி ரயில்வே கேட் முதல் பிளாட்பாரத்தில் சுமார் 100 மீட்டர் பிளாட்பார பகுதியில் திருத்தணி நகரத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சேர்ந்து ரயில் நிலையம் வரை துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புதர்கள் மண்டிக் கிடப்பதால் இதில் இருந்து பாம்பு உள்பட விஷ ஜந்துகள் வந்து மக்களை அச்சுறுத்துகிறது.

மேற்கண்ட பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் மது அருந்துவதுடன் சமூகவிரோத செயல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால் இவ்வழியாக பயணிகள் செல்வதற்குகூட அச்சப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே முதல் பிளாட்பாரத்தில் உள்ள புதர்களை அகற்றிவிட்டு கான்கிரீட் தளத்தை அமைக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவேண்டும். பயணிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மின்விளக்கு ஏற்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: