×

மணிப்பூர்; பஸ் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் பலி 9 ஆனது: ஜனாதிபதி இரங்கல்

இம்பால்: மணிப்பூரில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். மணிப்பூரின் தவுபால் மாவட்டம், யயிரிபோக் பகுதியில் தம்பால்னு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கல்வி சுற்றுலாவாக நோனி மாவட்டம் கூப்பும் என்ற இடத்துக்கு நேற்று புறப்பட்டனர். அனைவரும் உற்சாக வெள்ளத்தில் இருந்தனர். தலைநகர் இம்பாலில் இருந்து தென்மேற்கே 50 கி.மீ. தொலைவில் கூப்பும் அருகே நுங்சாய் என்ற கிராமத்தில் ஒரு வளைவில் வேகமாக பஸ் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 மாணவிகள் உயிரிழந்தனர்.

தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் இம்பால் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு மாநில சுகாதார அமைச்சர் சபம் ரஞ்சன் சிங் விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தார். மாணவர்கள் உயிரிழப்புக்கு மாநில முதல்வர் பிரேன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Manipur ,President , Manipur; 9 students killed in bus overturn accident: President condoles
× RELATED மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு..!!