×

பிசிசிஐ அவசர ஆலோசனை கூட்டம்; டி20 கேப்டனாக ஹர்திக்கை நியமிக்க திட்டம்: மகளிர் ஐபிஎல் சிறப்பாக நடத்தவும் முடிவு

மும்பை : ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மந்தமாக இருந்தது. குறிப்பாக பவர்பிளேவில் அதிரடியாக ஆடுவதை விடுத்து விக்கெட்டை காப்பாற்றிக்கொள்வதிலேயே வீரர்கள் கவனம் செலுத்தினர். இதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி,20 போட்டிகளில் இளம்வீரர்கள் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் கேப்டனை மாற்றவும் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த மும்பையில் நேற்றிரவு பிசிசிஐயின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கிரிக்கெட் அணியில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், தேர்வு குழுவினர் புதிதாக நியமிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்திய அணியின் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

அடுத்தடுத்து மூன்று பெரிய தொடர்கள் நடைபெற உள்ளதால் அதனை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டம் இந்த கூட்டத்தில் வகுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்ற காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவை டி20 கேப்டனாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில்  சூர்யகுமார்யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் ஏ பிளஸ் கிரேடு  வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஜன.3ம் தேதி மும்பையில்  தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரில், ஹர்திக் பாண்டியா இந்தியாவை  வழிநடத்துவார் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதேபோன்று பிசிசிஐயின் ஸ்பான்சர் ஆக விளங்கும் பைஜூஸ் மற்றும் எம்பிஎல் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் வரை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சிக்கு வேற நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய ஒப்பந்தம் கூறப்பட உள்ளன. தேர்வு குழுவை பொறுத்தவரை விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு வரும் நாட்களில் நேர்முகத் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மகளிர் ஐபிஎல் போட்டியை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ, அனைத்து போட்டிகளையும் மும்பையில் வைக்க திட்டமிட்டுள்ளது. இதேபோன்று ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதே போன்று உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வராமல் சென்றால் என்ன செய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களின் சுமையை குறைக்க டெஸ்ட் ஒரு நாளுக்கு ஒரு பயிற்சியாளரும், டி20க்கு வேறு பயிற்சியாளரும் நியமிக்க பிசிசிஐ இந்த கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளன.

*அவகாசம் கேட்ட ஹர்திக்
கேப்டன் பதவி குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியாவிடம்  தெரிவித்ததாகவும், ஆனால் ஹர்திக்பாண்டியா முடிவெடுக்க சில நாட்கள் அவகாசம்  கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக  பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில்  இருந்து மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஒயிட்  பால் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக்கிடம் ஒப்படைக்க பிசிசிஐ யோசித்து  வருகிறது.

இந்த யோசனையை ஹர்திக்கிடமும் விவாதித்துள்ளது. ஆனால், அவர் சில  நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார். அவர் சொல்லும் முடிவை பொறுத்தும், புதிய  தேர்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்க்கமான  முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : BCCI ,Hardik ,T20 ,Women's IPL , BCCI emergency advisory meeting; Plan to appoint Hardik as T20 captain: Decision to run women's IPL well
× RELATED நான் விராட் கோலியை கேப்டன் பதவியில்...