×

‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ காவலர்களிடம் கமிஷனர் சங்கர் ஜிவால் புகார் மனுக்கள் பெற்றார்: நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவர்களிடம் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் படி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்து வரும் குறை தீர்வு முகாமில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் காவலர்களிடம் நேரடியாக புகார் மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழக காவல்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காவல்துறையில் பணியாற்றும் 1.37 லட்சம் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண முதல்வர் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’  என்ற பெயரில் மாநகர காவல் ஆணையரகங்கள், மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் போலீசாரிடம் உயர் அதிகாரிகள் குறைகளை புகாராக பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி  சென்னை மாநகர காவல்துறையில் 22 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். எனவே காவலர்களின் குறைகளை மற்றும் புகார்கள் தொடர்பாக மனுக்கள் பெறும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் தொடங்கியது.

இந்த முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பிறகு அவரே நேரடியாக மனுக்களை கொண்டு வந்த போலீசாரிடம், குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
இந்த குறை தீர்வு முகாமில் மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர், பணியிடமாறுதல், பதவி உயர்வு, துறை ரீதியான நடவடிக்கைகள் நீக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போலீசார் தங்களது மனுக்களாக கொண்டு வந்தனர்.

பிறகு போலீசார் தங்களது மனுக்களை வரிசையில் நின்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் கொடுத்தனர். அவர் அனைவரின் மனுக்களையும் பணிவோடு பெற்றுக்கொண்டு புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியின் போது, மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்லோகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Commissioner ,Shankar Jiwal ,Minister , Commissioner Shankar Jiwal receives complaints from constables 'Chief Minister in your department': orders higher officials to take action
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...