×

போதை பொருட்கள் விற்பனை: அண்ணாநகர், கோயம்பேடு பகுதியில் கடை, கடையாக போலீசார் ரெய்டு

அண்ணாநகர்: போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர், கோயம்பேடு பகுதியில் கடை, கடையாக போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகை கடைகளில் குட்கா,  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்யவேண்டும் என்று சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் நிலையத்துக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், கோயம்பேடு துணை ஆணையர் குமார் ஆகியோரின் உத்தரவின்படி, கஞ்சா, குட்கா, பான்மசாலா  உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம், ஜே.ஜே.நகர், நொளம்பூர், கோயம்பேடு, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆணையர்கள் ரவிச்சந்திரன், வரதராஜன், ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் தீவிர சோதனை செய்து செய்தனர். அங்குள்ள பெட்டிக் கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டு விற்பனை செய்யப்பட்ட  போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது; அண்ணாநகர், கோயம்பேடு ஆகிய காவல் மாவட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகளில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணி தீவிரப்படுத்தி வருகிறோம்.

கடை உரிமையாளர்களிடம் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தால் கைது செய்யப்பட்டு அந்த  கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம்  ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பள்ளி, கல்லூரி அருகே உள்ள கடைகளில் விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெட்டி கடைகளில் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தால் வியாபாரிகள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Tags : Annagar ,Coimbade , Drug sale: Police raid shop after shop in Annanagar, Koyambedu area
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்