×

திருப்பத்தூர் அருகே கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு: கோயிலுக்கு நிலம் தானம் கொடுத்த தகவல் உள்ளது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அன்னான்டப்பட்டியில் கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த அண்ணான்டப்பட்டி கிராமத்தில் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது:
திருப்பத்தூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது அன்னான்டப்பட்டி கிராமம். இங்கு பழங்கால கல்வெட்டு இருப்பதாக தொன்போஸ்கோ பள்ளி தமிழாசிரியர் குமரவேல் கொடுத்த தகவலின்பேரில் ஆய்வு நிகழ்த்தினோம். அங்கு 3 அடி உயரம் கொண்ட பலகை கல்லில் முன்பக்கம் 22 வரிகளும், பின்பக்கம் 13 வரிகளும் எழுதப்பட்டுள்ளன. இதில் சில வரிகள் தேய்ந்துள்ளன.

தமிழகத்தை கி.பி. 16ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விஜய நகர கால மன்னன் வேங்கடபதிராயரின் ஆட்சிக்காலத்தில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இது கி.பி. 1597ம் ஆண்டு கல்வெட்டாகும். தமிழும் கிரந்தமும் கலந்து இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. வேங்கடபதிராயரை இக்கல்வெட்டு மஹா மண்டலேஸ்வரன், ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வரன் என்று புகழ்கிறது. இக்கல்வெட்டு திருப்பெற்றூர் (திருப்பத்தூர்) என்று கூறுகிறது. இங்கு திரு என்பது செல்வ வளத்தை குறிக்கிறது. பெற்றூர் என்றால் எல்லா வளமும் பெற்ற ஊர் திருப்பெற்றூர் (திருப்பத்தூர்) என வந்துள்ளது.

இன்றைக்கு திருப்பத்தூர் தனி மாவட்டமாக உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து வளமும் பெற்ற ஊராக திருப்பத்தூர் இருந்திருக்கிறது. தொண்டை மண்டலத்தில் 79 நாடுகள் இருந்தன. அதில் ஒரு நாடு தான் எயில்நாடு. எனவே இக்கல்வெட்டு எயில் நாட்டு திருப்பத்தூர் என்கிறது. திருப்பத்தூர் அண்ணான்டப்பட்டியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட இக்கோயிலுக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் தானம் தரப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

இவ்வூரில் பழமையான பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலே இக்கல்வெட்டுக்குரிய கோயிலாகும். இன்றைக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது இக்கல்வெட்டுக்கு முப்பூஜை கொடுத்து, யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பான விழாவை எடுப்பது கள ஆய்வின்போது அறிய முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirupattur Discovery ,Vijayanagara , Tirupattur, AD 16th century Vijayanagara period inscription, donation of land to the temple,
× RELATED திருப்புகழில் தெய்வங்கள்