எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடிக்கு தொண்டர்கள் பாடம் புகட்ட வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு

சென்னை: எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேசினர். ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:

அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்: நான்  ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதற்கு மூன்று காரணம். ஒன்று ஜெயலலிதா,  யாரையாவது தன்னுடைய வாழ்நாளில் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார்  என்றால் ஓபிஎஸ்சைதான். அவர் ஒரு விழாவுக்கு செல்ல முடியவில்லை என்றால்,  ஓ.பன்னீர்செல்வத்தைதான் அனுப்பி வைப்பார்.

ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர்  ஓ.பன்னீர்செல்வம். 2வது காரணம், அரசியல்வாதிக்கு நம்பகத்தன்மை வேண்டும்.  ஒரு பொருளை கொடுத்தால் பத்திரமாக திரும்ப கொடுக்க வேண்டும். தனக்கு கொடுத்த  முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதாவிடம் மனமகிழ்ச்சியோடு திரும்ப கொடுத்தவர்  ஓபிஎஸ். 3வது காரணம், ஒரு இயக்கத்தை வழிநடத்த அடக்கம், பணிவு, துணிவு என்ற  மூன்று குணம் தேவை. அடக்கம் (ஓபிஎஸ்) இருக்கும் இடம் சொர்க்கம். எடப்பாடி  இருக்கும் இடம் நகரம். பெரியமனுஷன் பணிவாக இருப்பான்.

அர்ப்பன் ஆட்டம்  போடுவான். துணிவு, ஓபிஎஸ்சிடம் அதிகமாகவே உள்ளது. பொதுக்குழு காட்சியே  போதும். வாகனத்தை (அதிமுக இயக்கத்தை) ஓட்ட தெரியாதவர்களுடன்  தொடர்ந்து பயணம் செய்கிறீர்களே, நீங்கள் என்ன இறுதி ஊர்வலமாக  போகப்போகிறீர்கள். அதிமுகவை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை.  தொண்டர்கள்தான் கட்சியின் உண்மையான அங்கீகாரம்.

இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்:  கூடிய சீக்கிரம் எடப்பாடி பழனிசாமி வனவாசம் போக இருக்கிறார். கட்சிக்கு  துரோகம் செய்தவர் எடப்பாடி. யாரால் அதிமுகவில் நுழைந்தாரோ அவருக்கே துரோகம்  செய்தவர் எடப்பாடி. காலில் விழுவார்கள், யாரும் தவழ்ந்து போக மாட்டார்கள்.  சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி. 4 ஆண்டுகள் எடப்பாடியின்  அட்டூழியத்தை கண்டும் காணாமல் இருந்து, கட்சியை காப்பாற்றிய  ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி துரோகம் செய்தார்.

ஒருமுறை தேர்ந்தெடுத்து  விட்டால் 5 வருடம் யாராலும் அசைக்க முடியாது. அப்படித்தான்  ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பணத்தால்  எதையும் வாங்கி விடலாம் என்று பதவி வெறி பிடித்தவர் எடப்பாடி. ஒன்றுபட  வேண்டும், ஜெயலலிதா கண்ட இயக்கத்தை, அவர் கூறியபடி 100 ஆண்டு காலம்  ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார். இதில் என்ன தவறு.  எடப்பாடி கூட்டியது பொதுக்குழு அல்ல, பொய் குழு. இணை ஒருங்கிணைப்பாளர்  பதவியில் இருந்து விலகி விட்டதாக எடப்பாடியே கூறியுள்ளார்.

இப்போது  இருக்கும் ஒரே தலைவர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். அவரிடம்தான்  இரட்டை இலை வரும். சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி அரசியல் அனாதையாகி  விடுவார். நிச்சயமாக தர்மம் நம் பக்கம் உள்ளது. நன்றியை மறப்பதையே தொழிலாக  கொண்டவர் எடப்பாடி. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியை அழிக்க நினைக்கும்  எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் பாடம் புகட்ட வேண்டும். நம்மிடம்  இருப்பவர்கள்தான் உண்மையான அதிமுகவினர். இயக்கத்தை காப்பாற்ற தொண்டர்கள்  ஒன்று சேர்ந்துவிட்டால் எவரும் ஒன்றும் செய்யும் முடியாது. அங்கு  இருப்பவர்கள் பதவிக்காக, பணத்துக்காக இருக்கிறார்கள்.

எங்கள் அணியில்  உள்ளவர்களை ஓபிஎஸ் காப்பாற்றுவார். இரட்டை இலையும், கொடியும் நம்மிடம்தான். துணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.சி.டி.பிரபாகர்: எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும். நாம் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் நிற்போம். துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன்: தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர் ஓபிஎஸ்.

நமக்கும் எடப்பாடிக்கும் என்ன வழக்கு. இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆர் எழுதிய சட்ட திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என்பதுதான் வழக்கு. எம்ஜிஆர், நாவலர், ஜெயலலிதா உள்ளிட்ட யாரும் சட்டத்தை திருத்த முன்வரவில்லை. நீங்கள் திருத்த பார்க்கிறீர்கள். அதிமுகவுக்கு நீங்கள் (எடப்பாடி) ஆற்றிய பணி என்ன. ஏழைகளுக்காக தொடங்கிய இயக்கம் யார் பக்கமும் போகாது. உங்கள்(ஓபிஎஸ்) பக்கம்தான் வரும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Related Stories: