×

சுற்றுலா பொருட்காட்சி டெண்டரை எதிர்த்து வழக்கு பன் வேர்ல்டு நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் 2023ம் ஆண்டுக்கான 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பொருட்காட்சியை நடத்துவதற்காக கடந்த அக்டோபர் 31ம் தேதி தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட டெண்டரை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்திருந்தது. 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், டெண்டர் திறக்கப்பட்ட போது தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றி விட்டு டெண்டரை இறுதி செய்துள்ளதால், டெண்டருக்கு தடை விதிக்கவும், தங்கள் படிவத்தை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு நடந்த பொருட்காட்சியின் போது அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 903ஐ செலுத்தாததால் பங்கேற்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொள்ள முடியாது என டெண்டர் நிபந்தனைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், இரு வழக்குகளையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Bun World , A case against the tourism exhibition tender and a fine of Rs. 50 thousand to Bun World
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்