×

எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?: வரவு செலவு கணக்குகள் இணையத்தில் வெளியீடு

புதுடெல்லி: அதிமுக வரவு செலவு கணக்கு விவகாரத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடத்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அதிமுக கட்சியில் புதிதாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அனைத்து ஆவணங்களும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அது தொடர்பாக எந்தவொரு பதிவேற்றத்தையும் செய்யாமல் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு இடைக்கால மனுவும், அதே போன்று அதிமுக பொதுக்குழு வழக்கில் தேர்தல் ஆணையத்தை மனுதாரராக இணைக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் இரு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் வரும் ஜனவரி 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
   
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,‘‘கடந்த 2021-2022 ஆகிய நிதி ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்குகளை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்துள்ளார்.

அதனை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் கட்சியின் வரவு, செலவு கணக்குகள் கொண்ட அனைத்து ஆவணங்கள், கட்சியின் தரப்பில் அவர்களின் ஆடிட்டருக்கு எழுதப்பட்ட கடிதம் உட்பட அனைத்தும் அடங்கும்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமுகவின் இடைக்கால பொதுச்செயளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தெரியவருகிறது.

Tags : Election Commission ,Edappadi ,Interim General Secretary , Election Commission approves Edappadi as Interim General Secretary?: Budget accounts published online
× RELATED எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை...