×

எல்லையில் சீன அத்துமீறல் குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சோனியா உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: இந்திய-சீனா எல்லை பிரச்னை குறித்து அளிக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த 9ம் தேதி தவாங் செக்டாரில்  எல்லையில் சீனா அத்துமீற முயன்றதால், அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றம் கூடியதும், சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். இதேபோல், சில எதிர்கட்சி எம்பிக்களும் சீன பிரச்னை குறித்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்ததால், மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் எம்பிக்களும் அவையை புறக்கணித்து வெளியேறினர்.

பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும்  திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆர்ஜேடி, ஜேடியு, சிவசேனா, என்சிபி, ஆம் ஆத்மி, திரிணாமுல், ஜனதா தளம் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். அப்போது, சீனாவின் அத்துமீறல்கள் குறித்த கேள்விகளுக்கு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

* விவசாயிகள் முன் 56 இன்ச்; சீனாவின் முன் 0.56 இன்ச்
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘எல்லையில் பதற்றம் குறித்த பிரச்னையில் இந்த நாட்டு மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் அரசு பதிலளிக்க வேண்டும். இந்த அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு முன்னால் 56 அங்குல மார்பைப் பெருமைப்படுத்துகிறது. ஆனால் அது சீனாவுக்கு முன் 0.56 அங்குலமாகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரித்து வருகிறது. அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்கிறது? எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நமது ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். பிறகு ஏன் சீனாவுடன் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது அரசு?’ என்று கேள்வி எழுப்பினார்.

* அவங்க இருந்தபோது பேச கூடாது நாங்க இருக்கும்போது பேசணுமா?
ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘2005ம் ஆண்டு நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது சீன எல்லைப் பிரச்னையை எழுப்பியது நினைவிருக்கலாம். அப்போது, ​​மறைந்த பிரணாப் முகர்ஜி அவைத் தலைவராக இருந்தபோது, ​​அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்னை அழைத்து, சீன எல்லைப் பிரச்னை மிகவும் உணர்ச்சிகரமானது. இது குறித்து பார்லிமென்டில் விவாதிக்காமல், உள்நாட்டில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. 2008ல் சீன அதிபர் இந்தியா வந்தபோது, ​​பா.ஜ., மீண்டும் விவாதம் கோரி, லோக்சபாவில் நோட்டீஸ் கொடுத்தோம். முகர்ஜி மீண்டும் ஒருமுறை இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பக் கூடாது என்றும், தீர்வுகள் நாடாளுமன்றம் மூலம் அல்லாமல் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

* எதிர்க்கட்சிகள் ஆலோசனை
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதேபோல், இந்தியா-சீனா எல்லைப் பதற்றம் தொடர்பாக அனைத்துக்கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

* டி.வியில் விவாதம் நடக்குது... ஆனால் நாடாளுமன்றத்தில்?
மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘இந்தியா-சீனா விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். நாங்கள் காலை முதல் சீனா விவகாரம் குறித்து விவாதம் கோரி வருகிறோம். டி.வி.யிலும், பார்லிமென்ட் வெளியேயும் எங்கும் விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க அனுமதி கொடுங்கள். அது எங்கள் உரிமை’ என்று தெரிவித்தார்.

Tags : Parliament ,Sonia , Opposition protest in parliament to discuss Chinese border encroachment: 12 opposition leaders including Sonia participate
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...