×

பட்டரைப்பெரும்புதூர் கொசஸ்தலை ஆற்றில் இருந்து வீரராகவர் கோயில் குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர திட்டம்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் உள்ள தீர்த்தகுளத்தில் உப்பும் மிளகும் கரைத்த பின் நீராடி கோபுரத்தை தரிசித்தாலே நோய்கள் தீரும் என்பது ஐதீகம். அதனாலேயே வைத்திய வீரராகவர் என்று போற்றப்படுகிறார். அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம்,  வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோயில் குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு வீரராகவரை தரிசனம் செய்கின்றனர். வீரராகவப் பெருமாள் கோயில் குளம் கிட்டத்தட்ட ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்டது.  

9 மூலைகள் கொண்ட இந்த குளம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோயில் குளம் கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குளமாகவும் மற்ற இடம் காலியாகவும் இருந்தது. கடந்த 2015ம் பெய்த மழை காரணமாக திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஏரி நிரம்பியதால்உபரி நீர் வீரராகவர் கோயிலுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் கோயில் குளம் நிரம்பி காணப்படுகிறது. இருப்பினும் தற்போது இருக்கும் நீரை அகற்றிவிட்டு புதிய நீரை சேமித்து வைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோயில் குளத்தில் எந்நாளும் நீர் இருக்க வேண்டும் என்பதற்காக நபார்டு திட்டத்தின் கீழ் நீர்வளத்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பட்டரைப்பெரும்புதூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் இருந்து நீர் கொண்டு வரும் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  பட்டரைப்பெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் வீரராகவர் கோயில் வரை சுமார் 13 கி.மீ. தூரத்திற்கு  பைப் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக சிறு மதகுகள் மற்றும் டேங்க் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 13 கி.மீ. தூரத்துக்கு பைப் லைன் அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பட்டரைப்பெரும்புதூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் லிட்டர் வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பட்டரைப்பெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம் வரை உள்ள 13 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்ட பைப் லைனில் கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா அல்லது விரிசல் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகு நீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் ஆய்வு விரைவில் நடைபெறும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Veeragavar ,Pattaraiperumbuthur Kosastalam , Project to bring water from Bhattaraiperumbudur Kosasthalai River to Veeraragavar Temple Pond: Coming soon
× RELATED ஆடி அமாவாசையை முன்னிட்டு வீரராகவர்...