×

வணிகர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொது கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: வணிகர்நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தமைக்கு தமிழக அரசுக்கு  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொது கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2022 ம் ஆண்டிற்கான  பொது குழு கூட்டம்  நேற்று  கோயம்புத்தூரில்  பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் பேரமைப்பின் புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது மேலும்,பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாய விளைபொருட்களுக்கான செஸ் வரியை முழுமையாக நீக்கக் கோரியும், ஈ-நாம் நடைமுறையை எளிமைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திடவும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது. 2017ம் ஆண்டு அமலாக்கத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி-யின் பல்வேறு குன்றுபடிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்ட மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு இன்றுவரை ஈ-வே பில் நடைமுறை, மற்றும் பில்லில் உள்ள சிறு-சிறு தவறுகள், டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை, அதிகாரிகளின் அதிகார அத்துமீறல்கள் அனைத்தும் களைந்திட உயர்மட்டக் குழு ஒன்றை உருவாக்கி, அதில் வணிகர் சங்கப் பிரதிநிதிகளை இடம் பெறச்செய்து தீர்வு காண இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

உணவுப்பாதுகாப்புத்துறை உரிமம் ஆயுள் உரிமமாக மாற்றிடவும், சட்டங்களில் உள்ள குறைபாடுகளால் ஏற்படும் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், உணவுப் பொருள் தயாரிப்பு விநியோக உரிமங்களில் உள்ள குறைபாடுகளை களைந்திடவும் குறிப்பாக ஆண்டு விற்று வரவு வருமானவரிச் சான்று முதலானவற்றை வற்புறுத்தக்கூடாது என பேரமைப்பு சார்பில் வலியுறுத்துகின்றோம்.தமிழக அரசு தங்கள் தலைமையில் பொறுப்பேற்று, வணிகர்நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, முழுமையான வணிகர்நல வாரிய உறுப்பினர்கள் நியமனத்துடன், செயல்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வேண்டுகிறோம். உச்சகட்ட மின் பயன்பாட்டு நேர மின்கட்டண உயர்வினை முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும். மேலும், மின்கட்டணம் மாதாந்திர அடிப்படையில் அளவீடு செய்து கட்டணம் நிர்ணயிக்க வேண்டுகிறோம். மேலும் எம்எஸ்எம்இ-ல் தொழில் உரிமங்களுக்கு மின்கட்டண சலுகை இருப்பதைபோல, அதில் பதிவு பெற்ற அனைத்து வணிகர்களுக்கும் மின்கட்டண சலுகை அளிக்க வேண்டுகிறோம்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணம், சொத்துவரி உயர்வு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை உருவாக்கியுள்ளதால் அதனை மறு பரிசீலனை செய்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது. வணிக உரிமங்கள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒற்றைச் சாளர முறையில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமமாக மாற்றி, வணிகர்கள் எளிதில் உரிமம் பெற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து பேனர்கள் வைக்க முன்அனுமதி வழங்கி வரைமுறைப்படுத்தி அதற்கான உரிமங்களை பெற எளிய நடைமுறையை வகுத்திட வேண்டுகிறோம். டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, கங்கைகொண்டான் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், போன்ற பகுதிகளில் துவங்கப்பட்ட தொழில் பூங்காக்களை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Government of Tamil Nadu ,Merchant Welfare Board ,General Meeting ,Constitutional ,Merchant associations ,Tamil Nadu , Thanks to Tamil Nadu Govt for operationalizing Merchants Welfare Board: Resolution of Tamil Nadu Federation of Merchants Associations in General Meeting
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...