×

பொங்கல் பானை தயாரிக்கும் பணி மந்தம் கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க அனுமதி கிடைக்குமா?

*மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கோதவாடி குளத்திலிருந்து களிமண் எடுக்க அனுமதி மறுப்பால், பொங்கல் பானை தயாரிக்கும் பணி மந்தமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மண்பாண்ட தொழிலாளர்கள்  தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களாக ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவிபட்டிணம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலகுறிச்சி, பில்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடக்கிறது.

சமையலுக்கு தேவையான பானை, நவராத்திரி கொழு பொம்மை, கார்த்திகை அகல் விளக்கு என முக்கிய விசேஷங்களின்போது மண்பாண்ட தொழில் பரபரப்பாக இருக்கும்.
  வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் சிலர், மண் பானை தயாரிப்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஈடுபட்டனர். ஆனால், பல இடங்களில் பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபடவில்லை என தெரிய வந்தள்ளது.

கடந்த 3 ஆண்டுக்கு மேலாக, பானை தயாரிப்பதற்குண்டான களிமண், கோதவாடி குளத்திலிருந்து  கிடைக்கபெறாமல் உள்ளதால், பண்பாண்ட தொழில் மந்தமடைந்துள்ளது. இந்த நிலை தற்போதும் நீடித்துள்ளதால், வரும் பொங்கல் பண்டிகைக்கான பானை தயாரிப்பு நலிவடையும் நிலை ஏற்படும் நிலை உள்ளது.

இது குறித்து மண்பாட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், சமையலுக்கு தேவையான பானை மற்றும் அகல்விளக்கு, கலசம் உள்ளிட்டவை தயாரிப்பதற்காக, கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் முறையாக அனுமதி பெற்று களிமண் எடுத்து வந்துள்ளோம். இதற்காக ஆண்டுதோறும் எங்களின் உரிமையை புதுப்பித்து வந்தோம்.

 ஆனால், மூன்று ஆண்டுகளாக கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க முறையான அனுமதி இல்லாததால், மண்பாண்ட தொழிலுக்கான போதிய மண் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதி மட்டுமின்றி பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வரபெற்றுள்ளது.  ஆனால் இந்த முறை பொங்கல் பண்டிகையையொட்டி பானை தயாரிப்பதற்குண்டான களிமண் கோதவாடியிலிருந்து கிடைக்க பெறாததால், இப்பணி மந்தமடைகிறது. பானை தயாரிப்புக்குண்டான தரமான களிமண் கிடைக்காமல் அவதிப்படுகின்றோம்.

 எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு, நாங்கள் மண்பாண்ட தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள கோதவாடி குளத்திலிருந்து மீண்டும் களிமண் எடுக்க அனுமதி அளிப்பதுடன், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Mandam Godavadi , Pollachi: If Pollachi is denied permission to take clay from the nearby Godavadi pond, the work of making Pongal pots will slow down.
× RELATED மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்