×

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சேவூர் அழகப்பெருமாள் கோயில் திருப்பணிகள் முடிவது எப்போது?

*அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

அவிநாசி :  அவிநாசி அடுத்த சேவூர் அழகப்பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயில் திருப்பணிக்கு பாலாலயம் செய்து 17 ஆண்டுகளை கடந்தும் கட்டுமான பணி நிறைவடையாமல் உள்ளது. அரசு போதிய நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை விரைவில் முடித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆன்மீகத்தலங்களும், வணிக தலங்களும், விவசாயமும் ஒரு காலத்தில் உயர்ந்தோங்கி விளங்கிய நகரம் செம்பியன்கிழானடி நல்லூர் எனப்பட்ட, அவிநாசி அருகே உள்ள சேவூர் ஆகும். வரலாற்றில் வட பாரிசார நாட்டின் முக்கியமான பகுதியாக விளங்கியது சேவூர் மாநகரம் ஆகும். வடபாரிசாரநாட்டுச் சேவூரின் விண்ணகரம் என்று அழைக்கப்பட்ட கோயிலே அழகப்பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் அழகப்பெருமாள் மூலவராக அருள்பாலித்துள்ளதால், விண்ணகரம் என்று போற்றப்படும் தலமாகும்.

மணவாள ஆழ்வார் மற்றும் நாச்சிமார்களான ஸ்ரீதேவி மற்றும் பூதேவி திருமேனிகளுடன் எழுந்தருளிய மிகச்சிறப்பான கோயில் இதுவாகும். நில உரிமை சட்டம் இயற்றப்பட்டது உள்ளிட்ட கல்வெட்டுகள் நிறைந்த கோயிலாகும். ஒருகாலத்தில்  இந்த கோயிலில் சுரங்க அறை இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவை தற்போது இல்லை. மேலும் வைகாசி விசாகத்தன்று,பெருமாள் தேரோட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. தற்போது கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இந்த கோயில், சிதிலமடைந்து வந்தது. புனரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த 2002-ம் ஆண்டு வசந்த மண்டப மேற்கூரையில் இருந்த கற்கள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதனால் கோயில் முற்றிலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறநிலையத் துறையினர் கோயிலில் இருந்த கல்யாண வெங்கட்ரமண பெருமாளுக்கு பாலாலயம் செய்து, கோயில் முன் சிறிய அறையில் தினமும் பூஜை நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து 2005ம் ஆண்டு இக்கோயில் கட்ட, பழமையான கோயில் இடிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மூலஸ்தானம், வசந்த மண்டபம், கருடாழ்வார் மண்டபம், பத்மாவதி தாயார் ஆலயம், அலுமேலு மங்கை தாயார் ஆலயம், தீபஸ்தம்பம், தழுகை தூண் உள்ளிட்ட திருப்பணிகள் செய்வது என ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு, திருப்பணியும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், அப்போதைய அரசு திருப்பணிக்காக ரூ.20 லட்சம் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, மூலஸ்தானம், அர்த்த மண்டபம் அரசு வழங்கிய தொகையில் கட்டப்பட்டது. உபயதாரர்களால், மகாமண்டபம், 2 அம்மன் சன்னதிகள், கோயிலின் சுற்றுச்சுவர், மேல்நிலைத்தொட்டி, தீபஸ்தம்பம் ஆகியன அமைக்கப்பட்டன. பல வருடங்கள் ஆகியும் இன்னும் திருப்பணி வேலைகள் முடியாமலேயே கிடப்பில் உள்ளது. இன்னும், வசந்த மண்டபம், நடை மண்டபம், சொர்க்கவாசல் மற்றும் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறாமலேயே உள்ளது.

‘‘ஆயிரம் ஆண்டுகளான, பழமை வாய்ந்த பெருமாள் கோயில் 2005ம் ஆண்டு, திருப்பணி வேலைகள் தொடங்கி தமிழக அரசு வழங்கிய நிதியிலும், உபயதாரர்கள் வழங்கிய நிதியிலும் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. நிதி பற்றாக்குறையால், கோயில் திருப்பணி வேலைகள் தாமதமாகி வருகிறது. சேவூரின் முக்கிய பகுதியான, போலீஸ் நிலையத்தின்   அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி, விரைவில் பணிகள் முடிவடைந்து இந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்’’ என பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.



Tags : Sevur Alagaperumal temple , Avinashi : Next to Avinashi, Sevur Alagaperumal temple is thousand years old. 17
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது